கப்புச்சின் சபை

கப்புச்சின் பிரான்சிஸ்கன் சபை என்பது புனித அசிசியின் பிரான்சிசுவினால் இத்தாலி நாட்டில் கிபி 1209 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட பிரான்சிஸ்கன் சபை என அழைக்கப்படும் எளிய துறவிகள் சபையின் மூன்று முக்கியமான கிளைகளில் ஒன்றாகும்.

தோற்றம்
1520 ஆம் ஆண்டு முதல் மேத்யு தெ பசியோ என்ற பிரான்சிஸ்கன் அப்செர்வன்ட் துறவி, புனித பிரான்சிசின் வாழ்வில் செபத்தையும் ஒருத்தல் முயற்சியையும் பிரிக்க இயலாது என்று கூறி கடினமான ஒருத்தல் வாழ்வினை மேற்கொண்டார். இவரோடு சில பிரான்சிஸ்கன் அப்செர்வென்ட் மற்றும் பிரான்சிஸ்கன் கன்வென்சுவல் துறவிகளும் இந்த புதிய வாழ்வில் இணைந்து செபத்திற்கும் மறைபணி வாழ்வுக்கும் சம முக்கியத்துவம் தந்து புனித அசிசி பிரான்சிசின் வாழ்வை பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரதிபலித்தனர். இது பிரான்சிஸ்கன் சபையில் ஒரு மாபெரும் மறுமலர்ச்சியாகும். இத்துறவிகள் நீண்ட தொப்பிக்கொண்ட ஒரு துறவற உடையை அணிந்திருந்தனர் எனவே கேம்ரினோ நகர சிறுவர் சிறுமிகளே இவர்களை கப்புச்சின்! (தொப்பி) கப்புச்சின்! (தொப்பி) துறவிகள் என அழைத்து மகிழ்ந்தனர். குழந்தைகளின் வாழ்த்தொலியே சபையின் பெயராய் அமைந்தது.திருத்தந்தை ஏழாம் கிளமென்ட் 1528, ஜூலை 3 ஆம் நாள் கப்புச்சின் சபையை, பிரான்சிஸ்கன் சபையின் ஒரு பிரிவாக அங்கீகரித்து தனி சபையாக இயங்கிட அனுமதி அளித்தார்.

நோக்கம்
ஏழ்மை வாழ்வில் இறை இயேசுவை பின்பற்றல்.
எளிய வாழ்வில் ஏழைகளோடு நெருக்கமான தோழமை கொள்ளுதல்
சகோதர கூட்டுவாழ்வில் உண்மை அன்பை பகிர்தல்.
செப தப ஒருத்தல் வாழ்வில் இறைதேடல்
நற்செய்தி அறிவுப்புபணியில் இறையரசை விதைத்தல்

வளர்ச்சியும் பரிணாமமும் 
ஏழ்மை எளிய வாழ்வில் ஈடுபட்டு விளிம்புநிலை மக்களோடு தோழமை கொண்டு தங்களை புனித அசிசி பிரான்சிசீன் எளிய சகோதரர்களாக அடையாளபடுத்திக் கொண்டனர். 1570 களில் இத்தாலியை உலுக்கிய கொள்ளை நோயில் கப்புச்சின் சபையினர் தன்னலமற்ற சேவை புரிந்தனர்,இதில் எண்ணற்ற துறவிகள் மடிந்தனர். பதினாறாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் வேகமாகப் பரவிய புரோட்டோஸ்டாண்ட் சபைக்கு எதிராக இயேசு சபையரோடு இணைந்து சமயப் பரப்பில் ஈடுபட்டு பல பகுதிகளை கத்தோலிக்க விசுவாசத்தில் நிலை நிறுத்தினர். 1622 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மறைபரப்பு பேராயத்தின் மூலம் ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் அமெரிக்க கண்டகளுக்கு சென்று நற்செய்தியை அறிவித்து புதிய கிறிஸ்தவ சமூகங்களை உருவாக்கி பல மறைமாவட்டங்களுக்கு அடித்தளமிட்டனர். 17 ஆம் நூற்றாண்டின் இறுதியில் 35,000 துறவிகளை கொண்ட பெரும் சபையாக உருவெடுத்தது. கத்தோலிக்கத் திருச்சபையில் இன்று பத்தாயிரத்துக்கும் மேலான துறவிகளை கொண்டு 103 நாடுகளில் இறைபணியாற்றும் மிகப்பெரிய துறவற சபைகளில் ஒன்றாக கப்புச்சின் சபை திகழ்கின்றது.

புகழ்பெற்ற புனிதர்கள்
கப்புச்சின் சபையில் புனிதர்கள் 15, அருளாளர்கள் 46, வணக்கத்துக்குரியவர்கள் 24, மற்றும் இறையடியார்கள் 97 என 182 பேர் புனித நிலைக்கு திருச்சபையால் அங்கிகரிக்கப்பட்டுள்ளனர்.

புனித கேண்டலிஸ் நகர் பெலிக்ஸ்  (1515-1587 )  - சபையின் முதல் புனிதர்
புனித பிரின்டிசி நகர லாரன்சு  (1559-1619 )  - திருச்சபையின் மறைவல்லுநர்
புனித சிக்மரிங்ஞன் பிதேலிஸ்  (1578-1622 )  - சபையின் முதல் மறைசாட்சி
புனித பார்சம் கோன்ராடு  (1818-1894 )  - ஏழைகளின் தந்தை
புனித லியோபோல்டு மேன்டிக்  (1866-1942 )  - கிறிஸ்தவ ஒன்றிப்பின் பாதுகாவலர்
புனித பியட்ரல்சினாவின் பியோ  (1887-1968 )  - மக்கள் புனிதர், ஐந்து காய அற்புத மணத்தர்.



இந்தியாவில் கப்புச்சின் சபை
1632 ஆண்டு ஆறு பிரெஞ்சு கப்புச்சின் துறவிகள் இந்தியாவில் முதன் முறையாக புதுச்சேரியில் காலடி வைத்தனர். தென்னிந்தியாவில் மேலும் சூரத் (1639) மற்றும் சென்னையில் (1642) கப்புச்சின் மறைபணிதலங்கள் நிறுவப்பட்டன. இத்தாலிய கப்புச்சின் துறவிகள் 1707 இல் திபெத்,லகாசாவைத் தலைமையிடமாக கொண்டு இந்துஸ்தான் - திபெத் மறைபணிதலத்தை நிறுவினர். 1773 இல் ஆக்ரா மறைபணிதலம் கப்புச்சின் துறவிகளிடம் ஒப்படைக்கப்பட்டு வடஇந்தியா முழுமையும் சந்திர நாகூர் முதல் லாகசவரை சிந்து முதல் எங்கானம் வரை இமயமலை முதல் நர்மதா ஆறு வரை பரந்து விரிந்த பகுதியில் மறைபணியாற்றி முப்பதுக்கும் மேற்பட்ட மறைமாவட்டங்களை தங்களது விசுவாசத்தின் வியர்வையால் உருவாக்கி ஆக்ரா, பாட்னா, லாகூர், தில்லி, சிம்லா, அலகாபாத், சென்னை (இன்று இணைபேராலயம்)மற்றும் ஆஜ்ம்ரீன் மறைமாவட்ட பேராலயங்களை எழுப்பினர். பிரான்ஸ், இத்தாலி, சுவிட்சர்லாந்த், ஆஸ்திரியா, பெல்ஜியம், இங்கிலாந்து , அயர்லாந்து, மால்தீஸ், அமெரிக்க மற்றும் கனடா நாட்டு கப்புச்சின் துறவிகள் இந்தியாவில் நற்செய்தி அறிவிப்பு பணியில் ஈடுபட்டனர், இதில் குறிபிடத்தக்கவர் பாட்னா மற்றும் முபையின் ஆயர் வணக்கத்துக்குரிய அனஸ்தாசியுஸ் ஹார்ட்மன். இன்று 1500 இந்திய கப்புச்சின் துறவிகள் 14 மறைமாநிலங்கள் மற்றும் 4 மறைவட்டங்களில் இயேசுவின் புனித பணியை தொடர்கின்றனர்.

தமிழகத்தில் கப்புச்சின் சபையினர்
1632 இல் தமிழ் மண்ணில் புதுச்சேரியில் கால்பதித்த பிரெஞ்சு கப்புச்சின் குருக்கள் ஒரு நிலையான மறைபணி தலத்தை 1674 இல் நிறுவி இந்தியாவில் உள்ள அனைத்து பிரெஞ்சு குடியிருப்புகளில் (புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம், சந்திர நாகூர் மற்றும் ஆந்திராவின் சில கடலோர பகுதிகளில்) ஆன்மீக பணியை 1828 வரை செய்தனர். புதுவை-கடலூர் உயர்மறைமாவட்டம் பகுதியில் முதல் கிறித்தவ மறைப்போதகர்கள் கப்புச்சின் குருக்கள் ஆவர், கடற்கரை சாலையில் அமைந்துள்ள கபூஸ் கோவில் (அ) புனித சம்மனசுகளின் இராக்கினி ஆலயம் இருநூற்றாண்டு கப்புச்சின் மறைபணியின் சின்னமாக இன்றும் புதுச்சேரியில் திகழ்கிறது. சென்னை மாநகரின் முதல் கிறித்தவ மறைபணியாளர்கள் கப்புச்சின் குருக்கள் ஆவர். சென்னையில் 1642 இல் உருவாக்கப்பட்ட கப்புச்சின் மறைபணிதலம் 1834 வரை (192 ஆண்டுகள்) நீடித்தது. இந்த கப்புச்சின் மறைபணிதலமே 1886 இல் சென்னை உயர்மறைமவட்டமாக உயர்த்தப்பட்டு பின் 1954 இல் மயிலை மறைமாவட்டதோடு இணைக்கப்பட்டு சென்னை-மயிலை உயர்மறைமாவட்டம் ஆனது. எப்ரேம் தெ நேவேர் அவர்களால் அமைக்கப்பட்ட சென்னையின் முதல் கிறித்தவ ஆலயமான புனித அந்திரேயா புனித ஜார்ஜ் கோட்டைக்குள் 1752 வரை இருந்தது. இங்கு கப்புச்சின் துறவிகள் ஆர்மேனியன் தெரு, இராயபுரம், இராயபேட்டை, சிந்தாதரிபேட்டை, வண்ணாரப்பேட்டை, புதுப்பேட்டை, என சென்னையின் பல இடங்களில் புதிய கிறிஸ்தவர்களை உருவாக்கி ஆலயங்களை அமைத்தனர். பிரெஞ்சு புரட்சியால் போதிய மறைபணியாளர்கள் இன்றி பிற மறைபரப்பு சபைகளிடம் ஒப்படைக்கப்பட்டது. 109 ஆண்டுகள் இடைவெளிக்கு பின் கப்புச்சின் துறவிகள் தமிழகத்தில் திருச்சி திருவரங்கத்தில் 1943 ஜூன் 13 அன்று அமல ஆசிரமம் என்ற பெயரில் துறவற இல்லம் அமைத்து இன்று 300 தமிழ் கப்புச்சின் துறவிகள் இரண்டு மறைமாநிலங்களில் 30 துறவற இல்லங்களில் பல்வேறு நிலைகளில் இறைபணி தமிழகத்திலும், உலகின் பல்வேறு பகுதிகளிலும் ஆற்றிவருகின்றனர்.  குறிப்பாக ஆப்பிரிக்காவில் ஜிம்பாப்வே மற்றும் புர்கினோ பாசோ நாடுகளில் மறைபரப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

No comments:

Post a Comment