சிலுவைப்பாதை

அன்பின் பாதை
திருச்சிலுவைப்பாதை தொடக்க செபம்
முதல்வர்: தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே, ஆமென்!
எல்லோரும்:இரக்கத்தின் ஊற்றே இறைவா, உம் திருமகன்இயேசுவின் பாடுகளையும் இறப்பையும் நாங்கள்நினைவுகூர்கின்றோம். அவர் நடந்துசென்ற சிலுவையின்பாதையில் அவரைப் பின்சென்று நடந்திட நாங்கள்வந்துள்ளோம். இறுதிவரை இயேசுவின் உண்மைச்சீடராக நாங்கள் வாழ வரமருள வேண்டுமென்று உம்மைஇறைஞ்சி மன்றாடுகின்றோம். ஆமென்!
 சுருக்கமான உத்தம மனஸ்தாப ஜெபம்:
என் இறைவா! நன்மை நிறைந்தவர் நீர். அனைத்திற்கும் மேலாக அன்புக்கு உரியவர். என் பாவங்களால் உம்மை மனநோகச் செய்துவிட்டேன். ஆகவே நான் குற்றங்கள் பல செய்தேன் எனவும் , நன்மைகள் பல செய்யத் தவறினேன் எனவும் மனம் நொந்து வருந்துகிறேன்.உமது அருள் துணையால் நான் மனம் திரும்பி, இனிமேல் பாவம் செய்வதில்லை என்றும், பாவத்துக்கு ஏதுவான சூழ்நிலைகளை விட்டு விலகுவேன் என்றும் உறுதி கொடுக்கிறேன்.எங்கள் மீட்பராம் இயேசு கிறிஸ்துவின் பாடுகளின் பயனாக, இறைவா, என்மேல் இரக்கமாயிரும்.
திவ்விய இயேசுவே! எங்களுக்காகவும் உத்தரிப்புநிலை ஆன்மாக்களுக்காகவும் சிலுiவைப் பாதையைத் தியானிப்பவர்களுக்கு அளிக்கப்படும் பலன்களை அடைய விரும்பி, உம் இரக்கத்தைக் கெஞ்சி மன்றாடுகிறோம்.
புனித மரியாவே! வியாகுல அன்னையே! இயேசுவின் பாடுகளின் போது அவரோடு நீர் உடனிருந்து, அவருடைய பாடுகளில் பங்கேற்றது போல, நாங்களும் எங்கள் அயலார் அனுபவிக்கும் துன்பங்களில் அவர்களுடன் இருந்து துணைபுரியும் ஆற்றலைப் பெற உம் திருமைந்தனிடம் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

முன்னுரை
இறை யேசுவில் அன்புக்குரியவர்களே, தவக்காலத்தின் வெள்ளிக்கிழமையில் நாம் இன்று இருக்கிறோம், தவக்காலத்தின் முக்கிய நிகழ்வான சிலுவைப்பாதை வழிபாட்டை துவங்குகின்றோம். இம்மானிடம் மீட்புபெற தன்னையே தந்தை இறைவனுக்கு தகனபலியாக தந்த நம் ஆண்டவர் இயேசுவின் அன்பின் பாதையில் பயணிக்கயிருக்கின்றோம். அன்பே உருவான இறைவன் கன்னிமரியின் திருவயிற்றில் மனிதனாக உருவாகி இம்மண்ணில் பிறந்து அன்புக்கு சான்று பகர்ந்தார், ஏழை எளியவர்களுக்கு தன் வாழ்வை முழுமையாக அர்ப்பணித்து அவர்களின் விடுதலைக்காக உழைத்தார். உன்னை அன்பு செய்வதைப்போல உனக்கு அடுத்திருப்பவரையும் அன்பு செய்வாயாக என்று அறைகூவல் விடுத்தார். அன்பில்தான் புதிய சமத்துவ சமூகம் அமைக்க இயலும் என தன் புனித வாழ்வால் மெய்பித்தார். இன்றைய உலகம் இயேசு காட்டிய அன்பு வாழ்வை மறந்து சுயநலத்தில் விழுந்து சொல்லன்னா துன்பத்தில் வாடுகிறது, அதற்கு நீங்களும் நானும் சாட்சிகள். மதத்தின் பெயரால், சாதியின் பெயரால், மொழியின் வெறுப்புணர்வால், ஏழை பணக்காரர் ஏற்றத்தாழ்வு, தேசப்பிரிவுகளால் வேறுபாடு, ஆண் பெண் உறவுகளில் உரசல், குடுமபத்தில் விரிசல் என எண்ணற்ற பிரச்சனைகளை நாளும் சந்திக்கின்றோம். இத்தனை முரண்பாடுகளும் அன்பற்ற வாழ்வினால் நிகழ்ந்தது ஊரும் உலகமும் அறியும். இவற்றை நாம் களைய வேண்டாமா வாருங்கள் இயேசுவின் அன்பின் பாதை வழி நடப்போம்.

முதல் நிலை : அன்புக்கு தண்டனை
முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும் : அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே

இவ்வுலகை ஒரே சொல்லால் படைத்த இறைவன் தன்னால் படைக்கப்பட்ட மனிதனின் முன்னால் நீதி தீர்ப்புக்காக குற்ற்றவாளி கூண்டில் நிறுத்தப்படுகிறார். பிலாத்து மனசாட்சியை முழுவதும் மழுங்கடித்த மனிதன், தன் மனைவியின் மூலமாக அதை புதுபிக்க வாய்ப்புக் கிடைத்தும், தன் பதவிக்காக அதை தவறவிட்ட ஒருவன். இயேசு சாவுக்குரியவன், எனவே உரோமையர்களின் உச்சபச்ச தண்டனையான அவமான சிலுவை சாவு வழங்கப்பட வேண்டும் என்று யூத சங்கம் முழுமையும் முயற்சித்தது, வறியவரின் குரலான இயேசுவை கொன்று எளியவரின் வாழ்வை இருளுக்குள் தள்ள மொத்த அதிகார வர்க்கமும் எத்தனித்தது. சாவுக்காக இயேசு ஒருபோதும் அச்சமடையவில்லை ஆனால் அன்பு வாழ்வுக்கு கல்லறை கட்ட வேண்டும் என்ற அவர்களின் செயல் அவரை மிகவும் வருத்தியது. பதவிக்காக நீதியை கொன்று இயேசு சிலுவை சாவுக்குரியவர் என்ற தீர்ப்பு எழுதினான் பிலாத்து.
பிலாத்து மறைந்தாலும், இன்றும் நீதியை கொல்லும் பிலாத்துக்கள் இருக்கத்தான் செய்கின்றனர். இவற்றை வாய்மூடி மவுனியாக வெறும் பார்வையாளர்களாக வாழும் நாமும் பிலாத்துக்கள் என்பதை மறக்கவேண்டும். நீதி ஒவ்வொரு நாளும் பல்வேறு இடங்களில் தூக்கு மேடை ஏற்றப்படுகிறது, அநியாயமாக சாதாரண மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. நமது அறைகூவல் என்ன? ஏழைகளுக்காக நமது மனம் இறங்குகிறதா ? குடும்பங்களில் எவ்வாறு நீதி வாழ்கிறது ? இயேசுவின் சிலுவை மரணத்துக்காக கலங்கும் நாம், அநியாயமாக தண்டிக்கப்படுவோருக்காக குரல் கொடுத்திருகின்றோமா? இல்லை அவர்களுக்காக ஆதங்கபட்டிருகின்றோமா? சிந்திப்போம்
செபம்
அன்பே உருவான இறைவா! எம்மில் மனிதம் மலர்ந்திட நீர் காட்டிய அன்பு வாழ்வில் நாங்கள் என்றும் நடந்து உலகில் நீதியை நிலை நாட்ட வரம் தாரும் ஆமென்.
-ஒரு பர.அருள்.திரி.
மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மு. - மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள்சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது.
அ. – ஆமென்


இரண்டாம் நிலை: அன்பின் தோளில் உலகம்
தன்னையே இறைவனின் மகன் என்று சொல்லிக்கொண்டு இறைவனுக்கு இழுக்கு சேர்த்தவன் என்ற குற்றசாட்டுக்கு ஆளாகி சிலுவை மரணதண்டனை பெற்றார் இயேசு. மாசற்ற இயேசுவின் தோளில் பாரமான சிலுவை  சுமத்தப்பட்டது, ஆம் உலகத்தின் பாவம் அனைத்தும் மனுமகனின் தோளில். குற்றமற்றவரை குற்றவாளியாக்கி கொடூரமான சாவுக்கு கையளித்து கைகொட்டி சிரித்தது அதிகார வர்க்கம், இருப்பினும் இயேசுவின் முகத்தில் மட்டற்ற மகிழ்ச்சி, காரணம் தன் கொடிய சாவால் பாவத்துக்கும் சாவுக்கும் சாவுமணி அடிக்கபோகிறேன் என்பதால். இயேசு துணிந்து, வலிந்து சிலுவை மரத்தை ஏற்றுக்கொள்கிறார்.
இறைவன் தான் படைத்த நீச மனிதனின் ஈடேற்றுத்துக்காக தன்னை முழுமையாக தரும் அன்பு அளப்பரிது, இதைதான் புனித அகஸ்தீனார் கூறினார், அடிமையை மீட்க மகனையை அளித்த அளப்பெரிய அன்புபெருக்கே என்று இறைவனின் அன்பை போற்றுகிறார். இன்று நமது அன்புப்பணி எவ்வாறு இருக்கிறது, கொடுத்த பணம், பொருள் உதவிக்கு பாதகைகள் வைத்து விளம்பரம் தேடி தம்பட்டம் அடிக்கும் நிலைதானே. இயேசு கேட்பது பணம், பொருள் தாண்டி உண்மையான உடனிருப்பு, உறவு என்பதை மறவவேண்டாம். சமூகத்தின் ஏற்றத்திற்கு நமது அர்பணிப்பு தேவை, பிறரின் சோதனையில் நமது உடனிருப்பு தேவை எனபதை உணருவோம், அன்புள்ள மனிதர்களாக வாழ்வோமே சிந்திப்போம்
செபம்
இரக்கம் மிகுந்த இறைவா! நாங்கள் மீட்பு பெற உம்மையே எங்களுக்கு முழுமையாக தந்தீர், அதுபோல நாங்களும் எமது உறவுகளின் வாழ்வுக்கு முழுமையாக அர்பணிக்க வரம் தாரும் ஆமென்.

மூன்றாம் நிலை: அன்பின் பாதையில் முதல் சறுக்கல்
இயேசுவுக்கு இருப்பது தோல்வலியோ அல்லது உடல்வலியோ அல்ல மாறாக மனவலி, மனிதரின் மாறாத குணம் தரும் மனவலி. அன்பு அன்பு  செய்யபடவேண்டும் என்றார் புனித அசிசி பிரான்சிஸ், ஆம் அந்த அன்பு இயேசு போதித்த நற்செய்தி வாழ்வே, மூன்று ஆண்டுகள் இதற்காகவே கிறிஸ்து தனது வாழ்வை அர்பணித்து மனிதர் உண்மையான மகிழ்ச்சி பெற உதவினார். ஆனால் மனிதரோ கிறிஸ்துவை மறுத்து இழிவான வழியில் கிடைக்கும் சிற்றின்பத்திற்கு அடிமையாகும் நிலைக்கண்டு இயேசு கலங்கினார். கலிலேயா தொடங்கி யெருசலேம் வரை இயேசு உண்மையை உரக்க போதித்தார் ஆனால் மாறாத மனிதரின் நிலைக்கண்டு இயேசு தடுமாறுகிறார், அதுவே இந்த சறுக்கல். சறுக்கல்தான் ஆனால் இயேசு விழுந்து கிடக்கவில்லை, மாறாக எழுந்து சிலுவை சுமக்கிறார், மனிதர் குணம் மாறும் அங்கே மனம் வாழும் என்றே!
அன்புக்குரியவர்களே! நமது மனமும் குணமும் எவ்வாறு? நம்மில் நம்பிக்கை வைத்து நம்மை படைத்த இறைவன் முன்னேறி செல்கிறார், நாம் பிறரின் வலியை போக்க துணை செய்கின்றோமா அல்லது பிறர்க்கு வலியை ஏற்படுத்துகின்றோமா? இன்றைய உலகம் காயங்கள் நிறைந்து காணபடுகிறது, அக்காயங்களை குணமாக்குவது யார், நாம்தான் நமது நம்பிக்கைதான் என்பதை இயேசுவின் பயணம் நமக்கு உணர்த்துகிறது. விழுந்து கிடக்கமால் எத்தனை ஈடர்பாடுகள் வந்தாலும் எழுந்து நடப்போம், காயமற்ற சமூகத்தை அமைக்க வலுச்சேர்ப்போம்.
செபம்
நம்பிக்கையின் இறைவா! எங்களது வாழ்கை பாதையில் நாங்கள் சோர்வடையாமல் துணிந்து என்றும் சென்றிட வரம் தாரும் ஆமென்.

நான்காம் நிலை: அன்பின் சந்திப்பு
ஆண்டவர் இயேசு தனது அன்பு தாய் புனித மரியன்னையை சந்திக்கின்றார், இது இரண்டு உயிருள்ள அன்புக்களின் சந்திப்பு. ஈரைந்து மாதங்கள் தன் கருவிலே இறைவனின் வார்த்தையை தாங்கி அதற்கு உருக்கொடுத்து, இவ்வுலகிற்கு இயேசுவாக வழங்கினார். கருவிலும், கரத்திலும் மார்பிலும் போற்றி வளர்த்த மகன் கொடிய வதைக்கு உள்ளாகி சிலுவை சுமந்து குற்றவாளியாக ஊர் தூற்றும் நிலைக்கண்டு அன்னை மரி பதறுகிறார்கண்ணீர் கடலாய்  நிறுக்கும் தன் அன்புத்தாயின் கரம் பற்றிய இயேசு, அங்கு வார்த்தைகள் இல்லை கண்கள் மட்டுமே ஆறுதலை பரிமாறிக்கொள்கின்றன ஆனால் இதுதான் இறைவனின் திட்டம் என அறிந்து அனைத்தும் மனத்தில் பொதிந்து பொங்கி அழுகிறார் மரியா. மகனின் பயணம் ஒரு அன்பு பயணம் என புரிந்த மரியா ஆறுதல் அடைகிறார்.

இன்றும் பல தாய்மார்கள் கண்ணீரோடு நிற்கின்றனர், இவர்களின் கண்ணீருக்கு இயேசு போல அன்பு பயணங்கள் அல்ல மாறாக தடம் புரண்ட மனித வாழ்வால், மது, மாது, பணம், தீவிரவாதம், திருட்டு என வாழ்வை இழந்து நிற்கும் பிள்ளைகளின் நிலைகண்டு. இன்று பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு படிப்பு மற்றும் பல ஏற்றங்களை தர முயலுகின்றனர் ஆனால் கடவுள், மனசாட்சி, அன்பு வாழ்வு எதையும் தர மறுக்கின்றனர் விளைவு சமூகத்தில் கறைபடிந்த மனிதர்களை உருவாக்குகின்றனர். இங்கு தேவை இயேசுவின் வழி நடக்கும் மனிதர்கள் தாய்மார்களே இதை அன்னைமரியாவிடம் கற்றுக்கொள்ளுங்கள்.
செபம்
அன்பின் இறைவா! உம் தாய் மரியன்னையைப்போல நல்ல பிள்ளைகளை நாங்கள் இந்த சமூகத்திற்கு வழங்க அருள்தாரும் ஆமென்.

ஐந்தாம் நிலை : அன்புக்கு கிடைத்த நட்பு
பாரமான சிலுவை, முற்கள் நிறைந்த சாட்டை அடியின்  கொடிய சித்தரவதை ஆகிவற்றின் காரணத்தால் இயேசுவின் திருவுடல் கிழிந்து தொங்குகிறது, எங்கே இவர் கல்வாரி போகும்முன்பே வழியிலே இறந்துவிடுவாரோ , சிலுவை என்ற அவமான மரணத்திலிருந்து தப்பித்து விடுவாரோ என்ற அச்சம் உரோமை வீரர்களுக்கும், யூத குருக்களுக்கும் மேலோங்கிருந்தது. தங்களது திட்டம் தோற்க கூடாது என்பதற்காக, அங்கு வேடிக்கை பார்க்க வந்த சீரேனே ஊராகிய சிமியோனை சிலுவை சுமக்குமாறு கட்டாயப்படுத்துகின்றனர். பனிரெண்டு திருத்தூதர்களுக்கும், எழுவத்திரண்டு சீடர்களுக்கும் கிடைக்காத அறிய வாய்ப்பு இந்த ஏழை விவசாயிக்கு கிடைத்தது. இயேசுவின் பரிதாபமான நிலைகண்டு வருந்தி  அவருக்கு உதவிட  தானும் அவருடன் இணைந்து சிலுவையை சுமக்கிறார்.  வருந்தி சுமை சுமப்போரே வாருங்கள் என்னிடம் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருகிறேன் என்று சொன்ன மனுமகன், சிமியோன் தரும் சிறு இளைப்பாருதலினால் மகிழ்கின்றார். தனது துன்பமான நேரத்தில் எவ்வித கைமாறும் எதிர்பாராமல் வந்த தோழமையை நினைத்து இயேசு உற்சாகமடைந்து மீட்பு பயணத்தில் முன்செல்கிறார்
இன்றும் மனிதம் உயிர் வாழ்வதற்கு சிமியோன் போன்ற நல்ல உள்ளங்கள்தான் என்பதை நாம் மறவவேண்டாம். இன்பத்தில் கூடி கொண்டாடும் பலர் துன்பம் வந்ததும் ஓடி ஒளிந்து விடுவதை பார்க்கின்றோம், அத்தகய ஈன குணம் மனிதம் அல்ல என்பதை உணர்வோம், உண்மையான உறவுக்கு மதிப்பளித்து, பணத்தால் வரும் கானல் உறவுகளை களைந்து ஏழை, எளியோருக்கு தன்னலம் பாராமல் உதவும், வெற்று விளம்பரங்களை தவிர்த்து உண்மையில் உறவுக்கு கைகொடுப்போமே.
செபம்
இறக்கம் நிறைந்த இறைவா, போலியான உறவினை தவிர்த்து, உண்மையை மனதில் ஏற்றி துன்பத்தில் இருக்கும் அனைவருக்கும் என்னால் இயன்ற உதவியை செய்திட வரும்தாரும் ஆமென்.
அன்புக்கு கிடைத்த பரிசு

ஆறாம் நிலை: அன்புக்கு மீண்டும் ஒரு தோழமை
பூகம்பம் இடைய ஒரு இனிய தென்றல் இயேசுவின் முகத்தை வருடி சென்றது, ஆம் வெரோனிக்காள்  என்ற அந்த பெண் தென்றல் அன்று ஒரு அன்பு புரட்சி செய்தது, இயேசு சிலுவை சுமந்து செல்லும் பாதையில் பலர் வேடிக்கைப்பார்த்தனர், சிலர் வேதனைப்பட்டனர், ஆனால் யாரும் ஏசுவுக்கு உதவ வேண்டும் என்ற துணிச்சலில்லை, அந்த புரட்சியை வெரோனிக்காள் செய்து முடித்தார். இரத்தம், புழுதி படிந்த இயேசுவின் முகத்தை வெரோனிக்காள் துடைத்தார், மனுமகனுக்கே மாபெரும் ஆறுதல் அளித்தார், அந்த அன்பு  மனிதகுல மகளிருக்கு, அன்பின் ஆண்டவர் அந்த சிறுதுணியில் தனது திருமுகத்தை பதித்து பரிசளித்தார்.
வெரோனி க்காள் போன்ற மனிதரில் மாணிக்கம் நமது மத்தியிலும் உண்டு ஆனால் அவர்கள் ஒருசிலரே என்கின்றபோதுதான் நெருடலாக இருக்கிறது. பணம், பதவி, வலிமை என்று சமூகத்தில் செல்வாக்கு உடையோர் நம்மில் பலர் இருந்தாலும், சமூக விடியலுக்கு உண்மையாக உழைக்க வருவதில்லை என்பதுதான் உண்மை. இயேசு விரும்புவது வெறும் விசுவாசமில்லை மாறாக சேவை நிறைந்த விசுவாசம், அவர்களுக்கு மட்டும்தான் அவர்தரும் நிம்மதி என்ற அன்பு பரிசு கிடைக்கும். செல்வத்தில் புரண்டாலும் அதை இல்லாதவரோடு பகிர மனமில்லை என்றால் நிம்மதி ஒரு எட்டக்கனியே, நம்மால் இயன்ற உதவியை, ஏழைக்கும், நற்செய்தி பணிவாழ்வுக்கும் அளிப்போம், ஏழைக்கு இறங்குவது இயேசுவுக்கே இறங்குவது என்பதை உணர்வோம். வலக்கை செய்வதை இடக்கை அறியமால் இருக்கட்டும், இதை காணும் இறைவன் மட்டுமே நமக்கு முழுமையாக இறங்குவாரே!
செபம்
அன்பின் இறைவா! எங்களால் இயன்ற உதவியை இச்சமூக விடியலுக்கு வழங்க வரம்தாரும் ஆமென்.
ஏழாம் நிலை: அன்பின் பாதையில் இரண்டாம் சறுக்கல்
யானைக்கும் அடிசறுக்கும் என்பார்கள் இங்கு இறைமகனுக்கே அடிச்சறுக்குகிறது, மீண்டும் ஒருமுறை இயேசு சிலுவையின் பாரத்தால் தான் படைத்த மண்ணில் சாய்கிறார். அவர் தடுமாறவில்லை, ஆனால் நமது நயவஞ்சகத்தால் புழுதியில் தள்ளப்படுகிறார், மனிதரின் குணம் கண்டு படைத்தவன் கலங்குகிறார். நாம் மாந்தருக்கு வழங்கிய முழு சுதந்தரத்தை தனது சுயநலத்திற்காக பயன்படுத்தும் நிலைகண்டு வருந்துகிறார், மனிதர் இறைவனின் சாயல் என்பதை மறந்து அவர்களை கொத்து கொத்தாக கொல்லும் மனிதம் இழந்தோரை நினைத்து துடிக்கிறார். உலகம் செல்லும் பயங்கரவாத பாதை, மனிதரை மனிதர் பழிவாங்கும் பாதை, மக்களை ஏமாற்றி நடக்கும் எண்ணற்ற ஊழல்கள், மனிதரிடையே ஒற்றுமையின்மை, சீரழிவுகளை போக்க மனமில்லாமை பெண்ணடிமை, குடும்பத்தில் அன்பின்மை, இறைவனை மறந்து வாழ்வும் கொடிய நிலைமை ஆகிய கொடிய மனித சீரழிவுகளை நினைத்து பதறித்தான் இயேசு இங்கு  விழுகிறார்.

இன்று விழுந்து கிடப்பது இயேசு என்று சமூகம் என்பதை நாம் மறவவேண்டாம், இதை சரிசெய்வது இயேசுவின் சீடர்களாகிய நாம்தான், அந்த கடமையும், பொறுப்புணர்ச்சியும் நமக்கு உண்டு என்பதை நாம் தட்டிகழிக்க கூடாது. இன்றைய பல சிக்கல்களுக்கு காரணமாக இருப்பது நமது தடித்த வார்த்தைகள்தான், இதைதான் வள்ளுவ பெருந்தகை கூறினார், தீயினால் சுட்டப்புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்டவடு என்று, நமது நாவை காப்போம், மனிதரின் நலனை காப்போம். குடும்பத்தில் உள்ள சிக்கல்களை களைவோம், ஒருவர் ஒருவருக்கு மதிப்பளித்து, குடும்ப ஒற்றுமையை போற்றுவோம், ஆண்டவரின் வார்த்தையை அன்னை மரியைப்போல உள்ளத்தில் நிறுத்தி இல்லத்தில் வாழ்ந்து சமூகத்திற்கு எடுத்து செல்வோம் அங்கே விழுந்து கிடக்கும் மனிதரை கைதூக்கி நிறுத்திவிழுந்து கிடக்கும் இயேசுவை தூக்கி விடுவோமே !
செபம்
ஆறுதலின் இறைவா, சமூகத்தில் இருக்கும் எண்ணற்ற இழிவுகளை போக்க என்னையே நான் அளிக்க அருள்தாரும் ஆமென்.
எட்டாம் நிலை: அன்புக்கு ஆதரவு
இயேசுவின் நிலைக்கண்டு, யெருசலேம் நகர பெண்கள் மாரடித்து புலம்புகின்றனர். பார்வையற்றவருக்கு பார்வை தந்தவர், முடக்கவாத முற்றவரை நடக்க வைத்தவர், எண்ணற்ற ஏழைகளுக்கு நற்தொண்டு புரிந்தவர் அனைத்திற்கும் மேலாக இறந்தவரையும் உயிர்ப்பித்தவர் அவருக்கா இந்த அவமான சிலுவை தண்டனை, கொடிய சித்தரவதை என சோகத்தில் ஆழ்ந்தனர். ஆனால் யேசுவோ தனக்காக மாரடித்து அழும் பெண்களிடம், பச்ச மரத்திற்கே இந்த பாடென்றால் பட்ட மரத்திருக்கு என்ன நிலையோ, எனவே உங்கள் பிள்ளைகளுக்காக அழுங்கள் என்கிறார்.
இயேசுவின் கூற்று முற்றிலும் உண்மை, இன்றைய இளையோர் இறைவனை மறந்து, ஏன் பெற்றோர்கள், குடும்பத்தையும் மறந்து தான் தோன்றி தனமாக வாழ்வதை பார்கின்றோம். உலக இன்பம், நண்பர் கூட்டம், குடி களியாட்டம், போதை, பேதை  என வாழ்ந்து தங்களுது எதிர் காலத்தை இழப்பதை பார்கின்றோம். அவர்களுக்காக இறைவனிடம் அழுது, அவர்கள் நல்வழியில் புதிய வாழ்வுப்பெற்றிட வேண்டுங்கள் என்கின்றார். செபமே இறைவனின் இதயத்தை திறக்கும் சாவி என்று புனித தந்தை பியோ கூறுகின்றார், ஆம் செபத்தால், தபத்தால், உண்மையான வாழ்வால் இறைவனின் ஆசீரை நமது பிள்ளைகளுக்காக கொணர்வோம், ஆற்றல்மிக்க சமூகத்தை, அன்புள்ள இளையோரை, உண்மையான நாளைய உலகை இன்று எழுப்புவோமா?
செபம்
கனிவான இறைவா, எம் இளையோரை ஆசீர்வதியும், அவர்கள் இயேசுவின் பாதையை தெரிந்து உண்மையிலும், அன்பிலும் வழிநடக்க வரம்தாரும் ஆமென்.

ஒன்பதாம் நிலை: அன்பின் பாதையில் மூன்றாம் சறுக்கல்
மீண்டும் ஒருமுறை  சிலுவையின் பாரத்தால் இறைவனின் மகன் மண்ணில் சாய்கிறார், மனிதனின் பாவத்திற்காக புழிதியில் விழுந்து கிடக்கிறார். அவரை வீழித்தியது நீங்களும், நானும்தான், நமது பாவம்தான், எனபதை உணர்வோமா, பிறரை மன்னிக்காத போது, பிறருக்கு களங்கம் கற்பித்தபோது, பிறருக்கு இயன்றும் உதவாதபோது, இறைவனை மறந்து உலக இன்பத்தில் திளைத்தபோது, மீண்டும், மீண்டும் இயேசுவை மண்ணில் விழ்த்துகின்றோம். நம்மை படைத்து, நமக்கு வாழ்வளித்து, காத்த இறைவனுக்கு நாம் அளிக்கும் நன்றி பரிசு இதுதானா, மிகவும் வேதனையானது. என் வார்த்தைகளை நம்பாவிட்டாலும், என் செயல்கள் பொருட்டாவது நம்புங்கள் என்றார், ஆம் அவரது சொல்லும், செயலும் ஒரே நேர்க்கோட்டில் செல்லும் ஆற்றல் மிக்கது, அவரது வாழ்வில் பொய் புரட்டுக்கு இடமில்லை, உண்மை, நன்மை, அன்பு இவற்றுக்கு மட்டும்தான் இடம், அதுதான் மனிதருக்கு மகிழ்ச்சிதரும் பாதை என்றார், எத்தனை பேருக்கு அவர் உரைத்து கேட்டது?

இயேசுவின் வார்த்தையை நம்பாததால் நம் வாழ்வில் விளைந்தது என்ன? துன்பம், வேதனை, பிரிவு, நோய், தனிமை என்பதுதானே? பணம்,பொருள், வசதி அனைத்தும் இருந்தும் நிம்மதி எங்கே? என்று குரல் நம் உள்ளத்தில் ஓங்கி ஒலிக்கவில்லையா? ஆம் அன்புமிக்கவர்களே! உலகம் காட்டும் பாதைக்கு மயங்கி, உங்களையும், உங்கள் பிள்ளைகளையும், உங்கள் குடும்பத்தையும் இழக்க வேண்டாம், அவ்வாறு செய்தால் நடப்பது என்ன என்று நம்மை சுற்றி நடக்கும் அவலங்கள் நமக்கு தெரியும். எனவே இயேசுவின் உயிருள்ள வார்த்தைக்கு செவிமடுப்போம், பாவத்தை விலக்கி, நன்மையை நாடுவோம், நிம்மதி என்ற வெளிச்சம் நம் உள்ளத்தில் ஒளிரும் என்பதை உளமார நம்புவோமே? விழுந்து கிடக்கும் இயேசுவை நமது தூய வாழ்வால் தூக்கி நிறுத்துவோமா?
செபம்
அன்பின் இறைவா, பாவத்தை நீக்கி, நன்மையை நாங்கள் என்றும் நாடவும், உண்மையின் ஒளியில் உமக்கு என்றும் சேவை புரியவும் வரும்தாரும் ஆமென்

பத்தாம் நிலை: ஒளிவு மறைவற்ற அன்பு
ஆண்டவரின் ஆடைகள் உரியப்படுகின்றன, ஆம் அவற்றோடு சேர்த்து அவரின் தோலும் உரிக்கப்படுவதுதான் கொடுமை. கசையடிக்கும், எண்ணற்ற கொடுமைகளுக்கும் உள்ளான அவரது திருவுடல் இப்போது ஆடைகள் உரியபடுவதன் மூலம், பல காயங்கள் மீண்டும் புதிதாய் திறக்கின்றன. உயிரோடு ஆண்டவரின் தோல் உரிக்கப்படுவதுதான் உண்மை, அவரை நிர்வாணப்படுத்தி அவமானப்படுத்துகின்றனர்  ஆடையில்லா மனிதன் அரை மனிதன் என்கிறது பழமொழி, இங்கு இந்த கொடிய மனம் படைத்த மனிதர்கள் அவரை ஒரு உயிராக கூட மதிக்கவில்லை என்பதுதான் எதார்த்தம். ஏழைக்கு உடுத்தியவரை, உணவளித்தவரை, உண்மையை மட்டும் வாழ்வால் உரக்க கூவியவரை அவமானபடுத்தி எள்ளி நகையாடுகின்றனர், ஏளனம் செய்து கைகொட்டி சிரிக்கின்றனர். மனிதம் முழுமையாக கொண்டவரை ஒரு விலங்கைப்போல நடத்தி மனிதத்தை காரி உமிழ்கின்றனர். அன்பு புரட்சிக்கு அவமானம் மட்டும்தான் மிச்ச சொச்சமா? மனிதரின் மிருதனத்தை குறித்து  இயேசு கலங்குகின்றார், மனிதம் மறையும் நிலைகண்டு வேதனை படுகின்றார்
மனிதா இன்று எத்தனை பெண்கள் மானபங்கம் படுத்தப்படுகின்றனர், அவர்கள் இல்லத்தில், வேலை செய்யும் இடத்தில், பொது இடங்களில் நீ உணர்ந்தாயா? உன் தாய், தங்கை, மகளாக, மற்ற பெண்களை ஏற்க மறுப்பதால் விளையும் கொடுமை என்பதை என்றுதான் உணரபோகிறாய்? இறைவனின் பொறுமைக்கு எல்லை உண்டு, அதை மறந்தால், நடக்கும் என்ன என்பதையும் நீ அறிவாய், பிறகு எதற்கு வரம்பு மீறி பாவத்தைக்கட்டி துன்பத்தில் விழுகின்றாய், யாரையும் கேவல படுத்தாதே, கேவலமாக பேசாதே, அதை நீ இயேசுவுக்கே செய்கிறாய் என்பதையும் மறவாதே. நீயும் நானும் இயேசுவின் பிள்ளை, அவர் அவமானம் பட்டது நமது மானமான, மரியாதையான வாழ்வுக்குதான் எனபதை ஒருபோதும் மறவாதே, ஒருவர் மற்றவரை மதித்து, பிறரின் அந்தரங்க வாழ்வுக்கு மதிப்பளித்து அவர்களை நல்வழி படுத்தும் செயலில் மட்டும் இறங்கி புதிய விடியலுக்கு வழிக்காட்டுவோமே, அது மட்டுமே சரியான அன்பின் பாதை எனபதை உணர்வோம்!
செபம்
அன்பின் இறைவா நாங்கள் ஒருவர் மற்றவரை மதித்து, மனிதத்தின் மாண்பைக் காத்து வாழ்ந்திட வரம்தரும் ஆமென்.
பதினோராம் நிலை: அன்பினை ஆணிகளால் துளைக்கின்றனர்
இயேசுவை சிலுவையின் மீது கிடத்தி மூன்று ஆணிகளால் அறைந்து  அவரை அந்த சிலுவையோடு இணைக்கின்றனர், இயேசுவின் நரம்புகள் அறுக்கப்படுகின்றன, எலும்புகள் முறிக்கப்படுகின்றன, இரத்த நாளங்கள் எல்லாம் அறுந்து தெறித்து இரத்தம் பீறிட்டு ஓடுகின்றது. சொல்லன்னா துன்பத்தில் இயேசு ஒரு புழுவைப்போல துடிக்கின்றார், மனித உருவம் முற்றிலும் சிதைந்து காணப்படுகின்றார். மனிதாபமற்ற அந்த உரோமை வீரர்களும், யூத குருக்களும் அவரின் இந்த நிலைகண்டு சிறிதும் பதறாமல் கொண்டாடுகின்றனர். ஆணிகள் கொண்டு அன்பு புரட்சியை முடக்கிவிடலாம் என்று இரத்த வெறிபிடித்த அந்த அதிகாரவர்க்கம் எத்தனிக்கிறது. உதவிகள் செய்தே பழக்கபட்ட ஆண்டவரின் புனித கரங்களை கூர்மையான ஆணிகள் குத்தி கிழிக்க மனுமகனின் குருதி மண்ணில் ஆறாய் ஓடுகிறது. கலிலேயா தொடங்கி யெருசலேம் வரை நற்செய்தியை ஓய்வின்றி பறைசாற்றிய காலுகளுக்கு ஆணிகள் கொண்டு அணிகலன்களா, அந்த ஆணிகள் அவரின் புனித கால்களை கிழித்துக்கொண்டு சிலுவையோடு இணைக்கிறது. இத்தனை கொடுமைகள் மத்தியிலும் மனிதா உனக்கு என் அன்பு என்றுமே உண்டு என முனுமுனுக்கிறார் ஆண்டவர்.

அன்புக்குரியவர்களே! ஏன் இத்தனை பாடுகள், யாருக்காக நமக்காக எனபதை உணர்வோமே, இயேசுவின் இரத்தமே இவ்வுலகின் மீட்பு, கிறிஸ்துவின் வழியின்றி மானிடருக்கு மீட்பில்லை, என்பது உண்மை என்பதை உணர்வோமா? நம்முடைய பாவங்கள் இயேசுவின் புனித இரத்தத்தால் கழுவப்படுகின்றன, புதிய வாழ்வை நாம் பெறுகின்றோம். இன்றும் எத்தனயோ மக்கள் கொடிய உடல் வலிக்கும், மன வலிக்கும் உள்ளாக்கப்படுகின்றனர், நம்முடைய இரக்கமற்ற சொல், செயல் பலரின் மனதை குத்தி கிழித்தி ஆறா வடுவை ஏற்படுத்துகின்றன. கடும்வார்தைகளால்  இன்று பல குடும்பங்கள் வீதிக்கு வந்துள்ளன, அப்போது எல்லாம் இயேசுவையே குத்தி கிழிக்கின்றோம் என்பதை என்றாவது உணர்ந்தது உண்டா. பிறருக்கு மதிபளிப்போம், குறிப்பாக சோதனையான நேரத்தில் தோள் கொடுப்போம், துணை நிற்போம்.  வன் சொல் அகற்றி இன் சொல்லில் இயேசுவுக்கு சிறு ஆறுதல் தருவோமே!
செபம்
ஆறுதலின் இறைவா, பிறருக்கு துன்பம் தரும் சொல், செயல் அகற்றி, என்றும் உன் வார்த்தையின் வழியில் வாழ வரம்தாரும் ஆமென்.

பன்னிரெண்டாம் நிலை: அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்
இயேசு சிலுவையில் மரிக்கிறார், வாழ்வு தர வந்த வாழ்வின் நாயகனை இந்த வஞ்சக உலகம் கொன்று, நீதியை வேரோடு சாய்த்து விட்டதாக கொக்கரிக்கிறது. எல்லாம் நிறைவேறிற்று என்ற நிறைவில், முப்பத்தி மூன்று வயதில் இயேசு தனது ஆவியை தந்தை இறைவனிடம் ஒப்படைக்கிறார். இறை அரசை பாலஸ்தீனத்தில் அடித்தளமிட்டு, அதை உலகெங்கும் எடுத்து செல்ல சீடர்களையும் உருவாக்கி, அன்பான, உன்னதமான, அமைதியான, ஒற்றுமையான உலகம் நாம் செய்வோம் என்ற நம்பிக்கையில் இயேசு சிலுவையில் உறங்குகிறார். தான் படைத்த உலகத்தை சீரமைக்க இயேசு எடுத்துக்கொண்ட பணி, மகத்தானது, பாவம் போக்க, சாபம் போக்க, சாவையும் நீக்க தன்னை முழுமையாக நமக்கு தந்து அன்பின் மறுபக்கம் அவரேதான் என்று நிருபித்துள்ளார். தந்தையே என்னை கைவிட்டது ஏனோ என்று கதறினாலும், தான் எடுத்துக்கொண்ட மீட்பு பணியிலிருந்து எள்ளளவும் விலகாமல் அன்புப்பணி புரிந்தார். சோதனைகளை கடந்து சாதனை புரிந்துள்ளார், அநீதியை வென்று நீதியை நிலைநாட்டியுள்ளார், அன்புவழி நடக்கும்  யாவருக்கும் விண்ணக வாசலை திறந்துள்ளார், இயேசுவின் மரணத்தால் இறைவனின் இரக்கம் நம்மை நோக்கி இறங்கியுள்ளது.

அன்பானவர்களே, நமக்காக ஆண்டவர் இயேசு சிலுவையில் மரித்துள்ளார், பாவ வாழ்வை அகற்றி தூய்மை வாழ்வை நாம் நாடவும், அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கவும், ஏழை எளியோரின் காவலராய் நாம் என்றும் இயங்கவும் வல்லவராம் கிறிஸ்து தன்னையே சாவுக்கு உட்படுத்திள்ளார். இயேசுவின் மரணம் புது வாழ்வுக்கான தொடக்கம், சாவை வென்று வெற்றி வீராக கிறிஸ்து உயிர்த்தெழுவார் அன்று நம் நம்பிக்கைகளுக்கு புது வடிவம் தருவார் எனபதுதான் எதார்த்தம். நமது தோல்வி, துன்பம், சோகம், இழப்பு, வேதனை அனைத்தும் இந்த மரணத்தோடு மரணித்து விட்டது என்பதுதான் உண்மை. உண்மைக்காக கிறிஸ்து போரடியதுப்போல நாமும் முன் வரவேண்டும், நம்பிக்கை இழந்தவரின் வாழ்வில் நம்பிக்கை தீபத்தை நாமும் ஏற்றுவோமே,! அன்புக்கு முடிவுயேது, மரணமேது, அது புதிய பரிணாமம் பெரும், இரவை வெல்லும் பகலவனாய் அது விரியும் !
செபம்
அன்பின் இறைவா, எந்த சூழ்நிலையிலும் நாங்கள் நம்பிக்கை இழக்காமல், என்றும் உன் வழியில் போராட வேண்டிய வலிமையை வரம்தாரும் ஆமென்.

பதிமூன்றாம் நிலை: தொட்டிலில் அன்பு
இறந்த இயேசுவின் உடல் அவரது அன்பு தாயின் மடியில் வளர்த்தப்படுகிறது, உயிரற்ற மகனின் உடல் கண்டு உள்ளம் குமருகிறார் அன்னை மரி. அன்று வானவன் வார்த்தையினால் புனிதமாக தனது உதரத்தில் உருவான இறைமகன், தன் இரத்தத்தின் இரத்தம், தன் தசையின் தசை, தன் அன்பு மகன் நிலைகண்டு கதறுகிறார். அந்த அன்புதாய்க்கு எவ்வாறு ஆறுதல் தரயியலும், யாரால்தான் இயலும். பித்து பிடித்தவள் போல் இறந்த தன் மகனை மடியில் போட்டுக்கொண்டு புலம்புகிறார், என் மகன் இறக்கவில்லை, உறங்குகிறார் என்று அழுது ஒப்பாரி வைக்கிறார். பாவ மாசற்ற தன் மகனை இந்த உலகம் கொன்றதை குறித்து அவள் கோபம் கொள்ளவில்லை, இவ்வளவு கொடிய மரணத்தின் மூலம்தான் மானிடத்தை மீட்க நீர் திருவுளம் கொண்டீரோ என்று வேதனையில் அழுகிறார். அவள் கண்ணீரின் ஒவ்வொரு துளிக்கும் நாம்தான் பதில் சொல்ல வேண்டும், அதை நமது புனித வாழ்வால் அவளுக்கு ஆறுதல் தருவதே நியாயமாகும்நம் பாவங்கள்தான் அவளுது மகனை கொன்றாலும், நம் மீது சிறிதும் அவருக்கு வருத்தமில்லை, மாறாக தன் மகனின் மரணத்தால் நாம் பெற்றுக்கொண்ட அன்பு வாழ்வை போற்றிக்காத்திட வேண்டும் என்றுதான் அவளது கண்ணீர் நமக்கு விடுக்கும் அழைப்பு.

இன்றும் எத்தனையோ தாய்மார்கள் கண்ணீரோடு வாழ்கின்றனர், காரணம் அவர்களின் மக்கள் அன்பு வாழ்வை இழந்து, தான்தோன்றி தனமாக வாழ்வதால். இன்றைய இளைய உலகம், குடும்பத்தை மறந்து, குறிப்பாக வயதான பெற்றோரை மறந்து, சுகபோக வாழ்வில் உள்ளனர், இதனால் இன்று பல வயோதிக பெற்றோர் தனிமையிலும், முதுமையிலும், நோயிலும் வாடுகின்றனர். பல பெற்றோர்களுக்கு பிள்ளைகள் இருந்தும், இல்லாதவர்களாக உள்ளனர். அந்த தாய்மார்களின் கண்ணீருக்காகவும் சேர்த்துதான் அன்னை மரி வேதனைப்படுகிறார். இருண்ட உலகில் வாழும் மக்களே, உலக இன்பத்தை விட்டு வெளியே வந்து உண்மையான மகிழ்ச்சியை பெறுங்கள், என் மகனின் மரணம் உங்களுக்கு புதிய சிந்தனையை தரவேண்டும் என்கிறார். அன்பு பெற்றோரின் காயங்களை போக்க ஒவ்வொரு மகனுக்கும், மகளுக்கும்  உரிமையும், கடமையும் உண்டு என்பதை உணர்வோம், காலம் தாழ்த்த வேண்டாம் கிறிஸ்து நமக்காக இறந்துள்ளார், அவரது உயிர்ப்பில் புது வாழ்வை பெற்றோரும், பிள்ளைகளும் பெறுவோம். பெற்றோர் தங்கள் பிள்ளைகளை, இயேசுவின் ஒளியில், வழயில், அன்னை மரியின் பரிந்து பேசுதலில் வளர்ப்போம், அப்போதுதான் காயங்கள் இல்லா உலகை அமைக்க இயலும். சிந்திப்போம் !
செபம்
அன்பின் இறைவா, நாங்கள் ஒருவர் மற்றவரின் கண்ணீரை துடைத்து இணைந்து வாழ்ந்திட வரம்தாரும் ஆமென்.

பதினான்காம் நிலை : கருவறையில் மீண்டும் அன்பு
இயேசுவின் புனித உடல் கல்லறையில் அடக்கம் செய்யப்படுகிறது. அமைதியில் ஆழ்கிறார் இறைவனின் திருமகன், தந்தை கடவுள் தன்னிடம் ஒப்படைத்த உலகத்தின் மீட்பு பணியை செவ்வனே முடித்து ஓய்வு கொள்கிறார். கோழைப்போல இயேசு மரணத்தை கண்டு அஞ்சவில்லை, துணிந்து சென்று சிலுவை மரணத்தை ஏற்று அனைவருக்கும் நிலைவாழ்வை உறுதிப்படுத்தியுள்ளார். இயேசுவை கொன்று வாழ்வை வீழித்தி விட்டோம் என அதிகாரவர்க்கம் கொண்டாட்டத்தில் திளைக்கிறது, ஆனால் இன்னும் மூன்றே நாளில் அவர்களுக்கு திண்டாட்டம்தான் என்பது தெரியவில்லை. உண்மை ஒருபோதும் வீழ்வதில்லை, பகலவனை யாரும் கையால் மறைக்க இயலாது, கிறிஸ்து வெற்றி வீராக சாவை வென்று புதிய வாழ்வு தர உயிர்த்தெழுவார். இங்கு உறங்குவது விண்ணக விதை, அது தன்னை மண்ணோடு மடிந்துள்ளது, தன்னலத்தை இழந்துள்ளது, மீண்டும் விண்ணை காண விருச்சகமாக எழும். பாவ இருளகற்றி, அகஒளி ஏற்றும், துன்பத்தை நீக்கி இனபத்தை அருளும், அடிமை விலங்கொடித்து சுதந்திர காற்றை அருளும்!

இயேசுவில் பாவம், சாபம், துன்பம், சாவு, அழுகை, தோல்வி என்பதில்லை, மாறாக புண்ணியம், புதுமை, வாழ்வு, வெற்றி என்பது மட்டும்தான் இனி உண்டு. எத்தனை துன்பங்கள் நம்மை சூழ்ந்தாலும், கிறிஸ்துவுக்குள் வாழ்வோர் எதிர்கொண்டு வெற்றிபெறுவார். இனி நம் வாழ்வில் இருளில்லை, ஒளி மட்டுமே, ஒளியாம் கிறிஸ்து நம்மை அருள் வாழ்வுக்கு அழைத்து செல்வார். கிறிஸ்துவை நம்புவோம், வாழ்வை துணிச்சலோடு எதிர்கொள்வோமே
செபம்
அன்பு இறைவா! நாங்கள் ஒருபோதும் எங்கள் நம்பிக்கையை உம்மில் இழந்து விடாமல் இருக்க வரும் தாரும் ஆமென்.

முடிவுரை
என்னில் விசுவாசம் கொள்பவன் இறப்பினும் வாழ்வான் என்பது இயேசுவின் வார்த்தை, கிறிஸ்துவில் என்றும் மரணமில்லை, மாறாக வாழ்வே நிரம்பியிருக்கிறது. என்னில் வாழ்பவர் இயேசுவே என்ற புனித பவுலடியாரின் வார்த்தையை தாரக மந்திரமாக கொள்வோம், சிலுவை பயணத்தோடு நமது தியானத்தை முடித்துவிடாமல் நம் அனுதின வாழ்வுக்கு எடுத்து சென்று அதை உயிர்கொடுப்போம். கிறிஸ்து நம்மில் வெளிப்பட வேண்டும் அப்போதுதான் நாம் விரும்பும் அமைதி என்றும் நம்மில் நிலைக்கொள்ளும். அதற்கான ஆற்றலை இறைவன் நமக்கு அருள, நாமும் பிறருக்கு துணை நிற்க ஆண்டவனின் ஆசிவேண்டி நிற்போம். இயேசுவின் அன்பில் நம் வாழ்க்கை பயணத்தை அமைப்போம். ஆமென்.

-    அருட்பணி. . தைனிஸ், கப்புச்சின்

10 comments: