திருப்பாடல்கள்

திருப்பாடல் 1

நற்பேறு பெற்றோர்

1 நற்பேறு பெற்றவர் யார்? -
அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்;
பாவிகளின் தீயவழி நில்லாதவர்;
இகழ்வாரின் குழுவினில் அமராதவர்;
2 ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்;
அவரது சட்டத்தைப் பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர்;
3 அவர் நீரோடையோரம் நடப்பட்ட மரம் போல் இருப்பார்;
பருவகாலத்தில் கனிதந்து,
என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்;
தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார்.
4 ஆனால், பொல்லார் அப்படி இல்லை;
அவர்கள் காற்று அடித்துச் செல்லும் பதரைப் போல் ஆவர்.
5 பொல்லார் நீதித் தீர்ப்பின்போது நிலைநிற்க மாட்டார்;
பாவிகள் நேர்மையாளரின் மன்றத்தில் இடம் பெறார்.
6 நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார்;
பொல்லாரின் வழியோ அழிவைத் தரும்.

திருப்பாடல் 2

கடவுள் தேர்ந்துகொண்ட அரசர்

1 வேற்றினத்தார் சீறி எழுவதேன்?
மக்களினங்கள் வீணாகச் சூழ்ச்சி செய்வதேன்?
2 ஆண்டவருக்கும் அவர்தம் அருள் பொழிவு பெற்றவர்க்கும் எதிராகப்
பூவுலகின் அரசர்கள் அணிவகுத்து நிற்கின்றார்கள்;
ஆள்வோர் ஒன்றுகூடிச் சதிசெய்கின்றார்கள்;
3 'அவர்கள் பூட்டிய தளைகளைத் தகர்ப்போம்;
அவர்கள் வைத்த கண்ணிகளை நம்மிடமிருந்து அறுத்தெறிவோம்' என்கின்றார்கள்.
4 விண்ணுலகில் வீற்றிருப்பவர் எள்ளி நகைக்கின்றார்;
என் தலைவர் அவர்களைப் பார்த்து ஏளனம் செய்கின்றார்.
5 அவர் சினமுற்று அவர்களை மிரட்டுகின்றார்;
கடுஞ்சினத்தால் அவர்களைக் கலங்கடிக்கின்றார்;
6 'என் திருமலையாகிய சீயோனில்
நானே என் அரசரைத் திருநிலைப்படுத்தனேன்.'
7 ஆண்டவர் ஆணையிட்டு உரைத்ததை நான் அறிவிக்கின்றேன்:
'நீர் என் மைந்தர்; இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன். 
8 நீர் விரும்புவதை என்னிடம் கேளும்;
பிறநாடுகளை உமக்கு உரிமைச் சொத்தாக்குவேன்;
பூவுலகை அதன் கடையெல்லைவரை உமக்கு உடைமையாக்குவேன்.
9 இருப்புக் கோலால் நீர் அவர்களைத் தாக்குவீர்;
குயவன் கலத்தைப்போல அவர்களை நொறுக்குவீர்.' 
10 ஆகவே, மன்னர்களே, விவேகமாக நடந்துகொள்ளுங்கள்;
பூவுலகை ஆள்வோரே, எச்சரிக்கையாயிருங்கள்.
11 அச்சத்தோடு ஆண்டவரை வழிபடுங்கள்;
நடுநடுங்குங்கள்!
அவர்முன் அக மகிழுங்கள்!
12 அவர் சினங்கொள்ளாதபடியும் நீங்கள் வழியில் அழியாதபடியும்
அவரது காலடியை முத்தமிடுங்கள்;
இல்லையேல், அவரது சினம் விரைவில் பற்றியெரியும்;
அவரிடம் அடைக்கலம் புகுவோர் அனைவரும் பேறுபெற்றோர்.

திருப்பாடல் 3

காலை மன்றாட்டு

1 ஆண்டவரே, என் எதிரிகள் எவ்வளவாய்ப் பெருகிவிட்டனர்!
என்னை எதிர்த்து எழுவோர் எத்தனை மிகுந்து விட்டனர்!
2 'கடவுள் அவனை விடுவிக்கமாட்டார்' என்று
என்னைக் குறித்துச் சொல்வோர் பலர். (சேலா)
3 ஆயினும், ஆண்டவரே, நீரே எனைக் காக்கும் கேடயம்;
நீரே என் மாட்சி; என்னைத் தலைநிமிரச் செய்பவரும் நீரே.
4 நான் உரத்த குரலில் ஆண்டவரிடம் மன்றாடுகின்றேன்;
அவர் தமது திருமலையிலிருந்து எனக்குப் பதிலளிப்பார். (சேலா)
5 நான் படுத்துறங்கி விழித்தெழுவேன்;
ஏனெனில், ஆண்டவரே எனக்கு ஆதரவு.
6 என்னைச் சூழ்ந்திருக்கும் பல்லாயிரம் பகைவருக்கு
நான் அஞ்சமாட்டேன்.
7 ஆண்டவரே, எழுந்தருளும்;
என் கடவுளே, என்னை மீட்டருளும்;
என் எதிரிகள் அனைவரையும் கன்னத்தில் அறையும்!
பொல்லாரின் பல்லை உடையும்!
8 விடுதலை அளிப்பவர் ஆண்டவர்;
அவர்தம் மக்களுக்கு ஆசி வழங்குவாராக! (சேலா)

திருப்பாடல் 4

மாலை மன்றாட்டு

1 எனக்கு நீதி அருள்கின்ற கடவுளே,
நான் மன்றாடும்போது எனக்குப் பதிலளித்தருளும்;
நான் நெருக்கடியில் இருந்தபோது,
நீர் எனக்குத் துணைபுரிந்தீர்;
இப்போதும் எனக்கு இரங்கி,
என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்தருளும்;
2 மானிடரே! எவ்வளவு காலம் எனக்குரிய மாட்சிக்கு
இழுக்கைக் கொண்டு வருவீர்கள்?
எவ்வளவு காலம் வெறுமையை விரும்பிப்
பொய்யானதை நாடிச் செல்வீர்கள்? (சேலா)
3 ஆண்டவர் என்னைத் தம் அன்பனாகத் தேர்ந்தெடுத்துள்ளார்;
நான் மன்றாடும் போது அவர் எனக்குச் செவி சாய்க்கின்றார்;
- இதை அறிந்துகொள்ளுங்கள்.
4 சினமுற்றாலும் பாவம் செய்யாதிருங்கள்;
படுக்கையில் உங்கள் உள்ளத்தோடு பேசி
அமைதியாயிருங்கள். (சேலா)
5 முறையான பலிகளைச் செலுத்துங்கள்;
ஆண்டவரை நம்புங்கள்.
6 'நலமானதை எங்களுக்கு அருள யார் உளர்?" எனக் கேட்பவர் பலர்.
ஆண்டவரே, எங்கள்மீது உமது முகத்தின் ஒளி வீசும்படிச் செய்தருளும்.
7 தானியமும் திராட்சையும் நன்கு விளையும் காலத்தில் அடையும் மகிழ்ச்சியைவிட
மேலான மகிழ்ச்சியை நீர் என் உள்ளத்திற்கு அளித்தீர்.
8 இனி, நான் மன அமைதியுடன் படுத்துறங்குவேன்;
ஏனெனில், ஆண்டவரே, நான் தனிமையாயிருந்தாலும்
நீரே என்னைப் பாதுகாப்புடன் வாழச் செய்கின்றீர்.

திருப்பாடல் 5

பாதுகாப்புக்காக மன்றாடல்

1 ஆண்டவரே, என் விண்ணப்பத்திற்குச் செவி சாய்த்தருளும்;
என் பெருமூச்சைக் கவனித்தருளும்.
2 என் அரசரே, என் கடவுளே,
என் கெஞ்சும் குரலை உற்றுக்கேளும்;
ஏனெனில், நான் உம்மை நோக்கியே மன்றாடுகின்றேன்.
3 ஆண்டவரே, விடியற்காலையில் என் குரலைக் கேட்டருளும்;
வைகறையில் உமக்காக வழிமேல் விழிவைத்துக் காத்திருப்பேன்.
4 ஏனெனில், நீர் பொல்லாங்கைப் பார்த்து மகிழும் இறைவன் இல்லை;
உமது முன்னிலையில் தீமைக்கு இடமில்லை.
5 ஆணவமிக்கோர் உமது கண்முன் நிற்க மாட்டார்;
தீங்கிழைக்கும் அனைவரையும் நீர் வெறுக்கின்றீர்.
6 பொய் பேசுவோரை நீர் அழித்திடுவீர்;
கொலை வெறியரையும் வஞ்சகரையும் அருவருக்கின்றீர்.
7 நானோ உம் பேரருளால் உமது இல்லம் சென்றிடுவேன்;
உம் திருத்தூயகத்தை நோக்கி
இறையச்சத்துடன் உம்மைப் பணிந்திடுவேன்;
8 ஆண்டவரே, எனக்குப் பகைவர் பலர் இருப்பதால்,
உமது நீதியின் பாதையில் என்னை நடத்தும்;
உமது செம்மையான வழியை எனக்குக் காட்டியருளும்.
9 ஏனெனில், அவர்கள் வாயில் உண்மை இல்லை;
அவர்கள் உள்ளம் அழிவை உண்டாக்கும்;
அவர்கள் தொண்டை திறந்த பிணக்குழி;
அவர்கள் நா வஞ்சகம் பேசும்.
10 கடவுளே, அவர்களின் குற்றங்களுக்குரிய தண்டனையை
அவர்களுக்கு அளியும்;
அவர்கள் தங்கள் சூழ்ச்சிகளாலேயே வீழ்ச்சியுறட்டும்;
அவர்களுடைய ஏராளமான தீச்செயல்களை முன்னிட்டு,
அவர்களைப் புறம்பே தள்ளிவிடும்.
ஏனெனில், அவர்கள் உம்மை எதிர்த்துள்ளார்கள்.
11 ஆனால், உம்மிடம் அடைக்கலம் புகுவோர் அனைவரும் மகிழ்வர்;
அவர்கள் எந்நாளும் களித்து ஆர்ப்பரிப்பர்;
நீர் அவர்களைப் பாதுகாப்பீர்;
உமது பெயரில் பற்றுடையோர் உம்மில் அக்களிப்பர்.
12 ஏனெனில், ஆண்டவரே, நேர்மையாளர்க்கு நீர் ஆசிவழங்குவீர்;
கருணை என்னும் கேடயத்தால் அவரை மறைத்துக் காப்பீர்.

திருப்பாடல் 6

இக்கட்டுக் காலத்தில் உதவுமாறு வேண்டல்

1 ஆண்டவரே, என்மீது சினங்கொண்டு என்னைக் கண்டியாதேயும்;
என் மீது கடுஞ்சீற்றங்கொண்டு என்னைத் தண்டியாதேயும்.
2 ஆண்டவரே, எனக்கு இரங்கும்;
ஏனெனில், நான் தளர்ந்து போனேன்;
ஆண்டவரே, என்னைக் குணமாக்கியருளும்;
ஏனெனில், என் எலும்புகள் வலுவிழந்து போயின.
3 என் உயிர் ஊசலாடுகின்றது;
ஆண்டவரே, இந்நிலை எத்தனை நாள்?
4 ஆண்டவரே, திரும்பும்;
என் உயிரைக் காப்பாற்றும்,
உமது பேரன்பை முன்னிட்டு என்னை மீட்டருளும்.
5 இறந்தபின் உம்மை நினைப்பவர் எவருமில்லை;
பாதாளத்தில் உம்மைப் போற்றுபவர் யார்?
6 பெருமூச்சினால் இளைத்துப் போனேன்,
ஒவ்வோர் இரவும் கண்ணீரில் என் படுக்கை மிதக்கின்றது.
என் கட்டில் அழுகையால் நனைகின்றது.
7 துயரத்தால் என் கண் வீங்கிப்போயிற்று;
என் பகைவர் அனைவரின் காரணமாக அது மங்கிப்போயிற்று.
8 தீங்கிழைப்போரே! நீங்கள் அனைவரும் என்னை விட்டு அகன்று போங்கள்;
ஏனெனில், ஆண்டவர் என் அழுகுரலுக்குச் செவி சாய்த்து விட்டார்.
9 ஆண்டவர் என் விண்ணப்பத்தைக் கேட்டருளினார்;
அவர் என் வேண்டுதலை ஏற்றுக்கொண்டார்.
10 என் எதிரிகள் யாவரும் வெட்கிப் பெரிதும் கலங்கட்டும்;
அவர்கள் திடீரென நாணமுற்றுத் திரும்பிச் செல்லட்டும்.

திருப்பாடல் 7

நீதி வழங்குமாறு வேண்டல்

1 என் கடவுளாகிய ஆண்டவரே,
உம்மிடம் அடைக்கலம் புகுந்தேன்;
என்னைத் துரத்துவோர் அனைவரிடமிருந்தும்
என்னைக் காப்பாற்றித் தப்புவியும்.
2 இல்லையெனில், என் எதிரிகள் சிங்கம்போல
என்னைப் பீறிக் கிழித்துப் போடுவார்கள்;
விடுவிப்போர் எவரும் இரார்.
3 என் கடவுளாகிய ஆண்டவரே,
நான் இவற்றைச் செய்திருந்தால்
- என் கை தவறிழைத்திருந்தால்,
4 என்னோடு நல்லுறவு கொண்டிருந்தவனுக்கு நான் தீங்கிழைத்திருந்தால்,
என் பகைவனைக் காரணமின்றிக் காட்டிக்கொடுத்திருந்தால் -
5 எதிரி என்னைத் துரத்திப் பிடிக்கட்டும்;
என்னைத் தரையில் தள்ளி மிதித்து நசுக்கட்டும்;
என் பெருமையைப் புழுதியில் புதைக்கட்டும். (சேலா)
6 ஆண்டவரே, சினங்கொண்டு எழுந்தருளும்;
என் பகைவரின் சீற்றத்தை அடக்க வாரும்;
எனக்காக விழித்தெழும்;
ஏனெனில், நீதியை நிலைநாட்டுபவர் நீர் ஒருவரே.
7 எல்லா இனத்தாரும் ஒன்றுகூடி உம்மைச் சூழச் செய்யும்;
அவர்கள்மீது உயரத்தினின்று ஆட்சி செலுத்தும்.
8 ஆண்டவரே, நீரே மக்களினத்தார் அனைவருக்கும் நீதி வழங்குபவர்;
ஆண்டவரே, என் நேர்மைக்கும் வாய்மைக்கும் ஏற்ப எனக்குத் தீர்ப்பளியும்.
9 பொல்லாரின் தீமையை முடிவுக்குக் கொண்டுவாரும்;
நல்லாரை நிலைநிறுத்தும்;
நீர் எண்ணங்களையும் விருப்பங்களையும் கண்டறிபவர்;
நீதி அருளும் கடவுள். [*]
10 கடவுளே என் கேடயம்;
நேரிய உளத்தோரை அவர் விடுவிப்பார்.
11 கடவுள் நடுநிலை தவறாத நீதிபதி;
நாள்தோறும் அநீதியைப் பொறுத்துக் கொள்ளாத இறைவன்.
12 பொல்லார் மனமாற்றம் அடையாவிடில்,
அவர் தம் வாளைக் கூர்மையாக்குவார்;
வில்லை நாணேற்றி ஆயத்தம் செய்வார்.
13 கொலைக் கருவிகளை ஆயத்தமாக்குவார்;
அம்புகளை அனல் பறக்கும்படி எய்வார்;
14 ஏனெனில், பொல்லார் கொடுமையைக் கருக்கொள்கின்றனர்;
அவர்கள் தீவினையைக் கருத்தாங்கி,
பொய்ம்மையைப் பெற்றெடுக்கின்றனர்.
15 அவர்கள் குழியை வெட்டி ஆழமாகத் தோண்டுகின்றனர்;
அவர்கள் வெட்டிய குழியில் அவர்களே விழுகின்றனர்;
16 அவர்கள் செய்த கேடு அவர்கள் தலைக்கே திரும்பும்.
அவர்கள் செய்த கொடுமை அவர்கள் உச்சந்தலையிலேயே விழும்.
17 ஆண்டவர் வழங்கிய நீதிக்காக அவருக்கு நன்றி கூறுவேன்;
உன்னதரான ஆண்டவரின் பெயரைப் போற்றிப்பாடுவேன்.

திருப்பாடல் 8

இறைவனின் மாட்சியும் மானிடரின் மேன்மையும்

1 ஆண்டவரே! எங்கள் தலைவரே!
உமது பெயர் உலகெங்கும் எவ்வளவு மேன்மையாய் விளங்குகின்றது!
உமது மாட்சி வானங்களுக்கு மேலாகவும் உயர்ந்துள்ளது.
2 பாலகரின் மழலையிலும் குழந்தைகளின் மொழியிலும்
வலிமையை உறுதிப்படுத்தி உம் பகைவரை ஒடுக்கினீர்;
எதிரியையும் பழிவாங்குவோரையும் அடக்கினீர்.
3 உமது கைவேலைப்பாடாகிய வானத்தையும்
அதில் நீர் பொருத்தியுள்ள நிலாவையும்
விண்மீன்களையும் நான் நோக்கும்போது,
4 மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்?
மனிதப் பிறவிகளை நீர் ஒருபொருட்டாக எண்ணுவதற்கு
அவர்கள் எம்மாத்திரம்?
5 ஆயினும், அவர்களைக் கடவுளாகிய உமக்குச்
சற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர்;
மாட்சியையும் மேன்மையையும்
அவர்களுக்கு முடியாகச் சூட்டியுள்ளீர்.
6 உமது கை படைத்தவற்றை அவர்கள் ஆளும்படி செய்துள்ளீர்;
எல்லாவற்றையும் அவர்கள் பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர்.
7 ஆடுமாடுகள்,
எல்லா வகையான காட்டு விலங்குகள்,
8 வானத்துப் பறவைகள், கடல் மீன்கள்,
ஆழ்கடலில் நீந்திச் செல்லும் உயிரினங்கள் அனைத்தையும்
அவர்களுக்குக் கீழ்படுத்தியுள்ளீர்.
9 ஆண்டவரே, எங்கள் தலைவரே,
உமது பெயர் உலகெங்கும் எவ்வளவு மேன்மையாய் விளங்குகின்றது!

திருப்பாடல் 9

நீதியின் கடவுளுக்கு நன்றி செலுத்துதல்

1 ஆண்டவரே, என் முழு இதயத்தாலும் உம்மைப் புகழ்வேன்;
வியத்தகு உம் செயல்களையெல்லாம் எடுத்துரைப்பேன்.
2 உம்மை முன்னிட்டு மகிழ்ந்து களிகூர்வேன்;
உன்னதரே, உமது பெயரைப் போற்றிப் பாடுவேன்.
3 என் எதிரிகள் பின்னிட்டுத் திரும்புவார்கள்;
உமது முன்னிலையில் இடறிவிழுந்து அழிவார்கள்.
4 நீர் நீதியுள்ள நடுவராய் அரியணையில் வீற்றிருக்கின்றீர்;
என் வழக்கில் எனக்கு நீதி வழங்கினீர்.
5 வேற்றினத்தாரைக் கண்டித்தீர்;
பொல்லாரை அழித்தீர்;
அவர்களது பெயர் இனி இராதபடி அடியோடு ஒழித்துவிட்டீர்.
6 எதிரிகள் ஒழிந்தார்கள்;
என்றும் தலையெடுக்கமுடியாமல் அழிந்தார்கள்.
7 அவர்களின் நகர்களை நீர் தரைமட்டம் ஆக்கினீர்;
அவர்களைப் பற்றிய நினைவு அற்றுப் போயிற்று.
ஆண்டவர் அரியணையில் என்றென்றும் வீற்றிருக்கின்றார்;
நீதி வழங்குவதற்கென்று அவர்
தம் அரியணையை அமைத்திருக்கின்றார்.
8 உலகிற்கு அவர் நீதியான தீர்ப்பு வழங்குவார்;
மக்களினத்தார்க்கு நேர்மையான தீர்ப்புக் கூறுவார்.
9 ஒடுக்கப்படுவோருக்கு ஆண்டவரே அடைக்கலம்;
நெருக்கடியான வேளைகளில் புகலிடம் அவரே.
10 உமது பெயரை அறிந்தோர் உம்மில் நம்பிக்கைகொள்வர்;
ஆண்டவரே, உம்மை நாடி வருவோரை நீர் கைவிடுவதில்லை.
11 சீயோனில் தங்கியிருக்கும் ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்;
அவருடைய செயல்களை மக்களினத்தாரிடையே அறிவியுங்கள்;
12 ஏனெனில், இரத்தப்பழி வாங்கும் அவர்
எளியோரை நினைவில் கொள்கின்றார்;
அவர்களின் கதறலை அவர் கேட்க மறவார்.
13 ஆண்டவரே, என்மீது இரக்கமாயிரும்;
என்னைப் பகைப்போரால் எனக்கு வரும் துன்பத்தைப் பாரும்;
சாவின் வாயினின்று என்னை விடுவியும்.
14 அப்பொழுது, மகள் சீயோனின் வாயில்களில்
உம் புகழ் அனைத்தையும் பாடுவேன்;
நீர் அளிக்கும் விடுதலை குறித்து அகமகிழ்வேன்.
15 வேற்றினத்தார் வெட்டின குழியில் அவர்களே விழுந்தனர்;
அவர்கள் மறைத்து வைத்திருந்த வலையில்
அவர்கள் கால்களே சிக்கிக்கொண்டன.
16 ஆண்டவர் நீதியை நிலைநாட்டுவதன் மூலம்
தம்மை வெளிப்படுத்தியுள்ளார்;
பொல்லார் செய்த செயலில்
அவர்களே சிக்கிக்கொண்டனர். (இடை இசை; சேலா)
17 பொல்லார் பாதாளத்திற்கே செல்வர்;
கடவுளை மறந்திருக்கும் வேற்றினத்தார் யாவரும் அங்கே செல்வர்.
18 மாறாக, வறியவர் என்றுமே மறக்கப்படுவதில்லை;
எளியோரின் நம்பிக்கை ஒருபோதும் வீண்போகாது.
19 ஆண்டவரே, எழுந்தருளும்;
மனிதரின் கை ஓங்க விடாதேயும்;
வேற்றினத்தார் உமது முன்னிலையில் தீர்ப்புப் பெறுவார்களாக!
20 ஆண்டவரே, அவர்களைத் திகிலடையச் செய்யும்;
தாம் வெறும் மனிதரே என்பதை வேற்றினத்தார் உணர்வார்களாக!

திருப்பாடல் 10

நீதிக்காக வேண்டல்

1 ஆண்டவரே, ஏன் தொலைவில் நிற்கின்றீர்?
தொல்லைமிகு நேரங்களில் ஏன் மறைந்துகொள்கின்றீர்?
2 பொல்லார் தம் இறுமாப்பினால்
எளியோரைக் கொடுமைப்படுத்துகின்றனர்;
அவர்கள் வகுத்த சதித்திட்டங்களில்
அவர்களே அகப்பட்டுக்கொள்வார்களாக.
3 பொல்லார் தம் தீய நாட்டங்களில் தற்பெருமை கொள்கின்றனர்;
பேராசையுடையோர் ஆண்டவரைப் பழித்துப் புறக்கணிக்கின்றனர்.
4 பொல்லார் செருக்கு உள்ளவராதலால் அவரைத் தேடார்;
அவர்கள் எண்ணமெல்லாம் 'கடவுள் இல்லை!
5 எம் வழிகள் என்றும் நிலைக்கும்' என்பதே.
உம் தீர்ப்புகளோ மிக மேலானவை;
அவர்களின் அறிவுக்கு எட்டாதவை.
தம் பகைவர் அனைவரையும் பார்த்து அவர்கள் நகைக்கின்றனர்.
6 'எவராலும் என்னை அசைக்க முடியாது;
எந்தத் தலைமுறையிலும் எனக்குக் கேடுவராது'
என்று அவர்கள் தமக்குள் சொல்லிக்கொள்வர்.
7 அவர்களது வாய் சாபமும் கபடும் கொடுமையும் நிறைந்தது;
அவர்களது நாவினடியில் கேடும் தீங்கும் இருக்கின்றன. [*]
8 ஊர்களில் அவர்கள் ஒளிந்து காத்திருக்கின்றனர்;
சூதறியாதவர்களை மறைவான இடங்களில் கொலை செய்கின்றனர்;
திக்கற்றவர்களைப் பிடிப்பதிலேயே அவர்கள் கண்ணாயிருக்கின்றனர்.
9 குகையிலிருக்கும் சிங்கம்போல் அவர்கள் மறைவில் பதுங்கியிருக்கின்றனர்;
எளியோரைப் பிடிப்பதற்காகவே அவர்கள் பதுங்கியிருக்கின்றனர்;
தம் வலையில் சிக்கவைத்து இழுத்துச் செல்கின்றனர்.
10 அவர்கள் எளியோரை நலிவுறச் செய்து நசுக்குகின்றனர்;
அவர்களது கொடிய வலிமையால் ஏழைகள் வீழ்த்தப்படுகின்றனர்.
11 'இறைவன் மறந்துவிட்டார்; தம் முகத்தை மூடிக்கொண்டார்;
என்றுமே எம்மைப் பார்க்க மாட்டார்' என்று
பொல்லார் தமக்குள் சொல்லிக் கொள்கின்றனர்.
12 ஆண்டவரே, எழுந்தருளும்!
இறைவா, உமது ஆற்றலை வெளிப்படுத்தும்!
எளியோரை மறந்துவிடாதேயும்.
13 பொல்லார் கடவுளைப் புறக்கணிப்பது ஏன்?
அவர் தம்மை விசாரணை செய்யமாட்டாரென்று
அவர்கள் தமக்குள் சொல்லிக்கொள்வது ஏன்?
14 ஆனால், உண்மையில் நீர் கவனிக்கின்றீர்;
கேட்டையும் துயரத்தையும் பார்த்து,
உதவி செய்யக் காத்திருக்கின்றீர்;
திக்கற்றவர் தம்மை உம்மிடம் ஒப்படைக்கின்றனர்;
அனாதைக்கு நீரே துணை.
15 பொல்லார் மற்றும் தீயோர் கைகளை முறித்துவிடும்;
அவர்களது பொல்லாங்கைத் தேடிக் கண்டுபிடித்து,
அது அற்றுப்போகச் செய்யும்.
16 ஆண்டவர் என்றுமுள அரசர்;
அவரது நிலத்தினின்று வேற்றினத்தார் அகன்று விடுவர்.
17 ஆண்டவரே, எளியோரின் விருப்பத்தை நீர் நிறைவேற்றுகின்றீர்;
அவர்கள் உள்ளத்திற்கு ஊக்கம் அளித்து அவர்களுக்குச் செவிசாய்க்கின்றீர்.
18 நீர் அனாதைகளுக்கும் ஒடுக்கப்படுகிறவர்களுக்கும் நீதி வழங்குகின்றீர்;
மண்ணினின்று தோன்றிய மனிதர் இனியும் அவர்களைத் துன்புறுத்த மாட்டார்.

No comments:

Post a Comment