புனிதர்கள்


புனித அசிசி கிளாரா 




புனித பதுவை அந்தோனியார் 



இயற்பெயர்: பெர்தினாந்து மார்ட்டின் தெ பெர்னாந்த் 

பிறப்பு:  ஆகஸ்ட் 15, 1195

இடம்: லிஸ்பன், போர்த்துகல்

பெற்றோர்: வின்சென்ட் மார்ட்டின்  & தெரசா பெயஸ் தவேரியா

துறவற வாழ்வு: புனித அகுஸ்தினார் சபை, கொயிம்ரா

குருத்துவ அருட்பொழிவு: 1219, 24 வது வயதில் 

மனமாற்றம்: மொரோக்கோ நாட்டில் மறைசாட்சிகளாக மரித்த பிரான்சிஸ்கன் துறவிகளின் எளிய, ஏழ்மை மற்றும் நற்செய்தி அறிவிப்பு பணியில் ஆர்வம்.

பிரான்சிஸ்கன் சபையில் சேருதல்: 1221

பிரான்சிஸ்கன் சபையில் புதிய பெயர் பெறுதல்: அந்தோனியார் 

அந்தோனியார் வாழ்நாளில் குறிப்பிடதக்க புதுமைகள்: 

1. ரீமினி கடற்கரையில் மீன்கள் இவரது போதனையை கேட்டன.
2. பட்டினிபோட்ட கழுதை புல்லை திண்ணாமல் அந்தோனியாரின் சொல்கேட்டு நற்கருணையை வணங்கியது.
3. உயரமான கட்டிடத்திலிருந்து விழுந்தவரை ஆகாயத்திலே நிறுத்தி வைத்து மடத்து தலைவரின் ஒப்புதல் பெற்று பத்திரமாக அவரை தரையிறக்கினார்.

நற்செய்தி பணி: பிரான்சில் துலூஸ், மொன்பெலியெ மற்றும் ப்ரோவான்ஸ் பகுதிகளில் நற்செய்தி பணியாற்றினார்.

தலைமைப்  பணி: 1126, மறைமாநில அதிபர், இத்தாலி வடக்கு மகாணம், பதுவை.

இறப்பு: ஜூன் 13, 1131, பதுவை 

புனிதர் பட்டம்: மே 30, 1132

திருநாள்: ஜூன், 13

பாதுகாவலர்: காணாமல்போன பொருட்களை மீட்க, கர்ப்பிணிகள், பசித்தோர், போர்த்துகல், பிரேசில் & அமெரிக்க பழங்குடியினர் 

சிறப்பு ஆசீர்: இயேசு குழந்தை வடிவில் இவரது கரங்களில் தவழ்ந்தது & புதுமைகள் செய்யும் அரிய வரம்.

சிறப்பு பெயர்கள்: புதுமை வள்ளல், கோடி அற்புதர் & பேய்களை நடுநடுங்க செய்பவர்.

திருத்தலங்கள்: பதுவை, இத்தாலி & லிஸ்பன், போர்த்துகல் 

திருச்சபையின் அங்கீகாரம்: மறைவல்லுநர் (1946)





தூய அந்தோணியாரை நோக்கிய  மன்றாட்டு


எங்கள் பாதுகாவலரான தூய அந்தோணியாரே, இறைவனின் அன்புள்ள அடியாரே கிறிஸ்து பாலகனை கையில் ஏந்தும் பேறுபெற்ற தூயவரே, திருமறையை ஆர்வமுடன் போதித்த சிறந்த போதகரே தப்பறைகளை தகர்த்தெறிந்த வித்தகரே, இறைவனின் தனி அருளால் அலகையை ஓட்டுபவரே, துன்புறுவோரின் துயர் துடைப்பவரே, பாவியராகிய நாங்கள் உமது உதவியை நாடி உம்மிடம் ஓடி வந்தோம்.
புதுமை வரம் பெற்றிருக்கும் எம் ஞானத்தந்தையே! நம்பிக்கையுடன் உம்மிடம் ஓடி வந்துள்ள உம் பிள்ளைகளின் மனறாட்டுக்களை கேட்டருளும். உமது ஆதரவை நாடி வந்துள்ள உம் அடியார் எம்மீது உம் கருணைக் கண்களைத் திருப்பியருளும். துன்பம், பிணி, வறுமை, சிறுமை ஆகியற்றால் வாடி வந்திருக்கும் எங்களுக்கு உதவியருளும். அழுவோரின் கண்;ணீரைத் துடைத்தருளும். நோயாளிகளுக்கு உடல் நலம் கொடுத்தருளும்.
எங்கள் அன்புக்குரிய தூய அந்தோணியாரே! இறைவனின் திருவுளப்படி எப்பொழுதும் நீர் நடந்தது போல நாங்களும் இன்பத்திலும் துன்பத்திலும் எப்பொழுதும் அவரது திருவுளத்துக்கு இசைந்து நடக்கவும், நீர் தூய வாழ்வு வாழ்ந்தது போல, நாங்களும் ஒருவருக்கும் வஞ்சகம் நினையாமலும், செய்யாமலும் தீமையை அகற்றி புனிதராய் வாழவும், திருச்சபை தளைக்கவும், நாடு செழிக்கவும், நாங்கள் நேர்மையுடன் உழைக்கவும், மக்கள் யாவரும் மெய்யங்கடவுளைக் கண்டறிந்து, தக்க முறையில் அவரை வழிபடவும் எங்களுக்காக இயேசுவை வேண்டியருளும்.
எங்களையும் எங்கள் குடும்பங்களையும், எங்கள் தொழில் முயற்சிகளையும், உழைப்பினையும் ஆசீர்வதித்தருளும். எங்கள் விண்ணப்பங்கள் நிறைவேற எங்களுக்காக இறைவனை மன்றாட வேண்டுகிறோம். - ஆமென். 

1 பர  3 அருள் & திரித்துவ புகழ் 




புனித பொனவெந்தூர்




புனித தந்தை பியோ 

புனித தந்தை பியோவின் நற்கருணை மன்றாட்டு

என்னோடு தங்கும் ஆண்டவரே, 
உம்மை நான் மறவாதிருக்க நீர் என்னோடு பிரசன்னமாயிருப்பது அவசியம். 
எவ்வளவு எளிதாக உம்மைக் கைவிட்டு விடுகிறேன் என்பதை நீர் அறிவீர். 
என்னோடு தங்கும் ஆண்டவரே, ஏனெனில் நான் பலவீனன். 
அடிக்கடி நான் தவறி விழாதிருக்க உமது பலம் எனக்குத் தேவை. என்னோடு தங்கும் ஆண்டவரே, எனக்கு வாழ்வே நீர்தான். நீர் இல்லையென்றால் என் வாழ்வில் எழுச்சி இல்லை. என்னோடு தங்கும் ஆண்டவரே, நீரே என் ஒளி. என்னோடு நீர் இல்லையென்றால் நான் இருளில் வீழ்கிறேன். உமது சித்தம் எதுவெனெ எனக்குக் காட்ட என்னோடு தங்கும் ஆண்டவரே, உமது குரல் கேட்டு உம்மைப் பின்செல்ல என்னோடு தங்கும் ஆண்டவரே. 
என்னோடு தங்கும் ஆண்டவரே, ஏனெனில் உம்மை அதிகமாக நேசிக்கவும், 
எப்போதும் உம் உறவில் வாழவுமே ஆசிக்கின்றேன். நான் உமக்குப் பிரமாணிக்கமாக இருக்க நீர் விரும்பினால் என்னோடு தங்கும் ஆண்டவரே, 
ஏனெனில் எனது எளிய ஆன்மா உமக்கு ஆறுதல் தரும் இல்லமாக, ஒரு அன்புக் கூடாரமாக இருக்க ஆசிக்கிறேன். என்னோடு தங்கும் ஆண்டவரே, 
பொழுது சாய்கின்ற இந்த நாள் முடிகின்றது. கடந்து போகும் வாழ்விலே மரணமும் தீர்ப்பும் முடிவில்லா வாழ்வும் எதிர்நோக்கி நிற்கின்றன. 
வழியில் நான் நின்று விடாதபடி எனது ஆற்றல் புதுப்பிக்கப்பட வேண்டும். 
அதற்கு நீர்தான் தேவை ஆண்டவரே. பொழுது சாய்ந்து, மரணமும் எதிர்நோக்கும் வேளையில் இருள், சோதனைகள், வறட்சி, சிலுவை, துன்பங்கள் அனைத்தையும் கண்டு அஞ்சுகிறேன். 
இருள் படரும் இவ்வேளையில் ஓ இயேசுவே நீர்தான் எனக்குத் தேவை. இன்று இரவு என்னோடு தங்கும் ஆண்டவரே, பல்வேறு ஆபத்துக்கள் நிறைந்த இவ்வாழ்வில் நீரே எனக்குத் தேவை. அப்பம் பிட்கையில் உம்மை சீடர்கள் அடையாளம் கண்டு கொண்டார்கள். நற்கருணைத் திருவிருந்து இருளை அகற்றும் ஒளியாகவும் என்னைப் பலப்படுத்தும் அமுதமாகவும், 
என் இதயத்தின் ஒப்பற்ற மகிழ்வாகவும் இருக்கும்படி உம்மை நான் கண்டுகொள்ளச் செய்தருளும். என்னோடு தங்கும் ஆண்டவரே, 
இறுதி வேளையில் திருவிருந்து வழியாக இல்லை என்றாலும் 
உமது அன்பு, அருள் மூலமாக என்னோடு தங்கும். 
என்னோடு தங்கும் இயேசு ஆண்டவரே, 
தெய்வீக ஆறுதலை நான் கேட்கவில்லை. 
ஏனெனில் அதற்கு நான் தகுதி அற்றவன். ஆனால் உமது பிரசன்னம் என்ற பெருங்கொடையை எனக்குத் தாரும். என்னோடு தங்கும் ஆண்டவரே, ஏனெனில் உம்மையே நான் தேடுகிறேன். உமது அன்பு, உமது அருள், உமது சித்தம், உமது இதயம், உமது உள்ளம் இவைகளையே நான் தேடுகிறேன். மேலும் மேலும் உம்மை நேசிப்பதைத் தவிர வேறு எதையும் நான் கேட்கவில்லை. ஏனெனில் உம்மையே நான் நேசிக்கிறேன். இவ்வுலகில் என் முழு உள்ளத்தோடு, உறுதியான அன்பால் உம்மை நேசிப்பேன். நித்திய காலமும் தொடர்ந்து உம்மை முழுமையாக நேசிப்பேன். ஆமென்.

நவம்பர் மாத புனிதர்கள்
புனிதர் அனைவர் பெருவிழா
புனிதர் அனைவர் பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் மிகச்சிறப்புடன் நவம்பர் ஒன்றாம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் இறந்து விண்ணகம் சென்ற அனைத்து ஆன்மாக்களும் தெரிந்தவர், தெரியாதவர் என்ற எவ்வித பாகுபாடுமின்றி, ஆண்டவரின் வார்த்தையை வாழ்வாக்கி இவ்வுலகை விட்டு அகன்ற நல்லோர் அனைவரையும் இந்நாளில் திருச்சபை புனிதராக போற்றி கொண்டாடுகிறது. தொடக்கத்தில் இவ்விழா கிறிஸ்துவுக்காக உயிர் தியாகம் செய்த மறைசாட்சிகளுக்காக கொண்டப்பட்டது, பின்பு அது கிறிஸ்துவுக்காக சாட்சிய வாழ்ந்து மரித்த அனைவரின் விழாவாக புனிதர் அனைவரின் விழாவாக கொண்டாடப்படுகிறது. இவ்விழா அகில உலக திருச்சபைக்கும் திருத்தந்தை நான்காம் அர்பனால் நீட்டிக்கப்பட்டது.
இவ்விழாவின் ஆரம்பம் குறித்து கிழக்கு மற்றும் மேற்கு திருச்சபைகளால் பல பாரம்பரியங்கள் முன்னிறுத்தப்படுகின்றன, அவற்றில் குறிப்பிடத்தக்கது, கிழக்கு திருச்சபையில் பைசான்டியன் பேரரசரான நான்காம் லியோ மரித்த தனது அன்பு மனைவி பேரரசி தியாபனோ நினைவாக அவருக்கு ஒரு ஆலயம் எழுப்ப ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் முயன்றார், ஆனால் இந்த முயற்சிக்கு திருத்தந்தை ஒப்புதல் தராததால் புனிதர் அனைவர் என்ற பெயரால் ஆலயம் எழுப்பினார், இவ்வாறு பெயரிடுவதால் தனது அன்பு மனைவியும் இப்புனிதர் அனைவரில் அடங்குவார் என்று தன்னை திருப்திபடுத்திக்கொண்டார். இவ்விழா நான்காம் நூற்றாண்டிலேயே மேற்கு திருச்சபையினரால் கொண்டாட ஆரம்பிக்கப்பட்டது, மறைசாட்சிகளின் திருபண்டங்களை இந்நாளில் ஒரு ஆலயத்திலிருந்து வேறோரு ஆலயத்தில் மாற்றிக் கொண்டனர், அதிலும் குறிப்பாக அந்தியோக் நகரில் பல புகழ்ப்பெற்ற மறைசாட்சிகள் பெரிதும் கொண்டாடப்பட்டனர். உயிர்ப்பு பெருவிழா வாரத்தின் வெள்ளிக்கிழமை இவ்விழா கொண்டாப்பட்டு, பிறகு எட்டாம் நூற்றாண்டில்  திருத்தந்தை கிரகோரியரால் நவம்பர் ஒன்றாம் நாளுக்கு மாற்றப்பட்டது.
புனிதர் அனைவர் பெருவிழா அனைத்து கிறிஸ்தவர்களாலும் மிக விமரிசையாக மேற்க்கத்திய நாடுகளில் கொண்டாபடுகிறது, இதே நாளில் இறந்தவர்களின் கல்லறைக்கு சென்று அஞ்சலி செலுத்துவதையும் காணலாம். கிறிஸ்துவில் திருமுழுக்குப்பெற்ற அனைவரும் புனிதராக வேண்டும் என்ற அறைகூவலை இன்றைய விழா நமக்கு எடுத்து கூறுகிறது, இந்நாட்களில் நாம் பார்க்க வாழ்ந்த திருத்தந்தையர்கள் புனித இருபத்தி நான்காம்  அருளப்பர், புனித இரண்டாம் அருள் சின்னப்பர், அருளாளர் ஆறாம் சின்னப்பர் மேலும் அருளார் அன்னை தெரேசா, புனித தந்தை பியோ இன்று புனிதர்களாக திருச்சபையால் உயர்த்தப்பட்டுள்ளனார். இவர்களை போன்று, நாமும் கிறிஸ்துவின் ஊழியர்களாக வாழ்வோம் புனிதத்தை மனிதத்தால் வென்றெடுப்போம்.உங்கள் அனைவருக்கும் புனிதர் அனைவர் பெருவிழா நல்வாழ்த்துக்கள்.

நவம்பர் 02
இறந்தோர் அனைவர் நினைவு
நவம்பர் இரண்டு கத்தோலிக்க கிறிஸ்தவர் அனைவருக்கும் மிகவும் முக்கியமான நாள், கிறிஸ்துவில் மரித்த அனைவரையும் நினைவு கூறும் மிகவும் உணர்ச்சிபூர்வமான நாள். நேற்று நம்மோடு வாழ்ந்தவருக்கு, நம் முன்னோருக்கு நாம் கண்ணீர் செப அஞ்சலி செலுத்தும் நாள், வாழ்வு முடிவதில்லை, மாறாக வாழ்வு மாறுபடுகிறது என்று கிறிஸ்துவின் உயிர்ப்பை ஓங்கி உரைக்கும் நாள், நாமும் ஒரு நாள் கிறிஸ்துவில் உயிர்த்தெழுவோம் என்ற நம்பிக்கையை தரும் நாள்.
இறந்த விசுவாசிகள் அனைவரையும் நினைவு கூறும் நாளாக பெரும்பாலும் கத்தோலிக்க திருச்சபையால் மட்டும் அனுசரிக்கப்படுகிறது, இந்நாளை ஆங்கிலிக்கன் போன்ற வேறு சில பிரிவினை சபையினரும் நினைவு கூறுகின்றனர். இறந்தோருக்காக இறைவேண்டல் செய்யும் வழக்கம் முதல் முறையாக பழைய ஏற்பாட்டில் இரண்டாம் மக்கபேயர் புத்தகம் 12: 42-46இல் வாசிக்க காணுகின்றோம், இதை திருச்சபையும் காலப்போக்கில் பின்பற்றியது, பிரான்சிஸ் நாட்டில் குளுனி என்ற நகரில் வாழ்ந்த புனித ஒதில் என்பவரால் பத்தாம் நூற்றாண்டில் ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்பட்டது, அது விரைவில் ஐரோப்பா முழுவதும் பரவியது.
இந்நாளில் இறந்த தங்களது பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள், முன்னோர்கள், யாரும் நினையாத ஆன்மாக்கள் என இறந்த அனைவருக்கும் திருப்பலி ஒப்புக்கொடுத்தல், திருச்செபமாலை செபித்தல், கல்லறைகளை சந்தித்தல் என பல ஆன்ம காரியங்களில் ஈடுபட்டு மரித்த ஆன்மாக்களின் ஈடேரற்றத்துக்காக செபித்தனர். இந்த அனைத்து பரிகார செயல்களையும் திருச்சபை அங்கீகரித்து மரித்த விசுவாசிகள், அதிலும் குறிப்பாக உத்தரிக்கிற நிலையிலுள்ள ஆன்மாக்களுக்காக செபிக்க விசுவாசிகளுக்கு அழைப்பு விடுக்கிறது. இன்றைய நாள் சிறப்பான முறையில் இறந்த விசுவாசிகளை நினைவு கூர்ந்தாலும் இம்மாதம் முழுவதும் இத்தகைய பாவ பரிகார புண்ணிய செயல்களில் இவருகளுக்காக செபிக்க நம்மை திருச்சபை அழைக்கிறது என்பதை நாம் மறக்க வேண்டாம். கல்லறை, இறந்தவர்களின் படங்கள், சிலைகளுக்கு மாலை அணிவித்தல், மெழுகுதிரி ஏற்றுதல், சாம்பிராணி போடுதல் என்று நமது செயல்பாடுகளை உணர்வுபூர்வமாக  மட்டும் நிறுத்திக்கொள்ளாமல், ஆக்கபூர்வமாக மாற்றிட துணிவோம், நம் முன்னோர் விட்டுச்சென்ற விசுவாசத்தை நமது அன்பு மற்றும் அறம் சார்ந்த பணிகளின் மூலம் மற்றவர்களுக்கு எடுத்து செல்வதில் உறுதியேற்போம்.

நவம்பர் 03
புனித மார்டின் தெ போரேஸ் 1579-1639
தென் அமெரிக்க கண்டத்தில் பெரு நாட்டின் தலை நகரான லிமாவில் புனித மார்டின் தெ போரேஸ் டிசம்பர் 9, 1579 ஆம் ஆண்டு ஸ்பானிய தந்தைக்கும், பனாமா நாட்டிலிருந்து அடிமையாக வந்து விடுதலை பெற்ற கருப்பின பின்னணிக் கொண்ட தாய்க்கும் மகனாக பிறந்தார். இவருடைய பெற்றோர் திருமணம் சட்டப் பூர்வமாக நடைபெறாமல் சேர்ந்து வாழ்ந்தனர், எனவே இவரது தங்கையின் பிறப்புக்குப் பிறகு, தந்தை இக்குடும்பத்தை கைகழுவியதால், தாய் அன்னா சலவை தொழில் செய்து பிள்ளைகளை காப்பாற்றினார். எவ்வளவுதான் உழைத்தாலும் அதற்குரிய போதிய வருமானம் கிட்டாததால் குடும்பம் வறுமையில் வாடியது, ஆகவே மார்டின் இரண்டு ஆண்டுகள் மட்டுமே தொடக்க கல்வி கற்க முடிந்தது, இவ்வாறு பசியும் பட்டினியுமாக பிள்ளைகளில் வளர்ப்பதில் இவரது அன்னை பெரிதும் போராடினார். சிறுவன் மார்டின் செப வாழ்வின் மீது பெரும் ஈடுபாடுக் கொண்டு இரவு முழுவதும், முழங்காலில் நின்று செபித்தான், அவர் வளர்ந்து பெரியவனாகிய போதும் செப வாழ்வும் சேர்ந்து வளர்ந்து முதிர்ச்சி பெற்றிந்தது.
துறவியாக வேண்டும் என்ற ஆசை மேலோங்கியது ஆனால் அந்நாட்களில் அந்நாட்டிலுள்ள மடங்களில் ஆப்பிக்கரும், இந்தியர் மற்றும் கலப்பினத்தவரும் சேர்க்கப்படுவதில்லை என்ற வழக்கம் இருந்தது. இறுதியாக லிமாவில் இயங்கிவந்த சுவாமிநாதரின் திருச்செபமாலை சபை மடத்தில் பணியாளராக தனது பதினைந்து வயதில் சேர்ந்தார். சமையலறை, தோட்டம் என அனைத்து இடங்களையும் விரைவாக சுத்தம் செய்து விட்டு செபத்தில் ஆழ்வதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தக் கொண்டார். சுவாமிநாதர் மடத்தில் பணியாளராக வேலை செய்யும் போதே பல புதுமைகளை மார்டின் செய்தார். நவதுறவியாக சக சகோதரர்களின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளானார், இவரது பிறப்பு, கருப்பினம் ஆகியவை அவர்களின் கிண்டலுக்கும் நையாண்டிக்கும் ஆளானது, ஆனால் அவற்றை எல்லாம் கடந்து 34வது வயதில் சுவாமிநாதர் சபை திருவுடை அணிந்து துறவற வார்த்தைப்பாடுக் கொடுத்து அருட்சகோதரர் ஆனார். துறவற வாழ்வை மேற்கொண்ட பின்பு, நோயாளிகளுக்கு பணிவிடை ஆற்றும் பொறப்பு கொடுக்கப்பட்டது இப்பணியை 59 வயதில் இறக்கும் வரை செய்தார்.
ஸ்பானிய பிரப்புக்கள், ஆப்ரிக்க அடிமைகள் என்ற வேறுபாடு பாராமல் அனைவருக்கும் ஒரே விதமான சேவை ஆற்றினார். மிகுந்த தூர் நாற்றத்துடன் வரும் யாசகர்களையும் அன்போடு வரவேற்று, அவர்களின் சீல் பிடித்த புண்களின் அழுக்ககற்றி மருந்திட்டு பணியாற்றுவதில் மானசீகமான மகிழ்ச்சிக் கொண்டார். லிமா நகரில் பெரும் கொள்ளை நோய் தாக்கி கணக்கற்ற மக்கள் மடிந்தனர், நோயுற்றவர்களை தன் தோளில் சுமந்து வந்து மடத்தில் வைத்து அவர்களுக்கு சேவையாற்றினார், கொள்ளை நோயின் கோரத்திற்கு அஞ்சிய மடத்தின் தலைவர், நோயுற்றவர்களை மடத்திருக்கு கொண்டுவர அனுமதி மறுத்தார். ஆனால் நம் புனிதரோ தன் தங்கையின் இல்லத்திற்கு நாளும் பொழுதும் பல நோயாளிகளை கொண்டு வந்து அவர்களுக்கு சிகிச்சையளித்து குணமளித்தார். தன் துறவற தலைவருக்கு கீழ்படியாமல் செய்த இச்சேவைக்காக மன்னிப்பு கோரினார், ஆனால் தலைவரோ இவரின் பிறன்பு சேவையை பாராட்டி அப்பணியை தொடர்ந்திட அனுமதித்தார். புலால் உணவை தவிர்த்து வாழ்ந்தார், யாசகமாக தான் தினமும் பெற்று வந்த உணவினை நாளொன்றுக்கு 160வது பேரின் பசியை போக்கி வந்தார் என்பது வியப்புக்குரியது, சிறு வயதில் வறுமையில் வாடிய இவருக்குத்தான் பசியின் கொடுமை தெரியும். தனது பிறன்பு பணியால் இயேசுவின் சாட்சியாய் வாழ்ந்த அருட்சகோதரர் மார்டின் தெ போரேஸ் நவம்பர் 3, 1639இல் மரணமடைந்தார். இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் தொடக்க விழாவில் 1962 ஆம் ஆண்டு  திருத்தந்தை புனித இருபத்தி மூன்றாம் அருளப்பரால் புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட்டார்.

நவம்பர் 04
புனித சார்லஸ் போரோமியோ (1538-1584)
புனித சார்லஸ் போரோமியோ பிரபுக்கள் குடும்பத்தில் இத்தாலி நாட்டிலுள்ள லொம்பார்தி பகுதியுள்ள அரோனா அரண்மனையில் , அக்டோபர் 2, 1538இல் பிறந்தார். இவரது குடும்பம் திருச்சபையிலும், நாட்டிலும் பெரும் நன் மதிப்பையும் கொண்டு பல முக்கிய பொறுப்புகளை வகித்தது, இவரது தாய் மாமன் ஜியோவானி ஆஞ்சலோ மெதிசி  திருத்தந்தை நான்காம் சின்னப்பர் ஆவார். மிகவும் வசதியான குடும்பத்தில் பிறந்ததால் மிகச்சிறந்த கல்வியும் கிடைத்தது, பவியா பல்கலைகழகத்தில் நாட்டு சட்டத்தில் பட்டம் பெற்றார், திருத்தம் இல்லாமல் பேசியதால் படிப்பில் சிறு சுணக்கம் ஏற்பட்டது ஆனால் அதை கடந்து திருச்சபை மற்றும் நாட்டு சட்டங்களில் முனைவர் பட்டம் பெற்று வெற்றிக் கண்டார். ஏழைகளின் மீது இளம் வயது முதலே இரக்கம் கொண்டு, அவர்களுக்கு உதவுவதில் பெரும் ஆர்வம் காட்டினார்.
இவரது தாய் மாமன் திருத்தந்தை நான்காம் சின்னப்பர் இவரை தனது செயலராக 1560இல் நியமித்து, கர்தினால் ஆண்டகையாக  உயர்த்தி பிரான்சிஸ்கன் மற்றும் கார்மேல் சபையினருக்கு கண்காணிப்பாளராக நிமயனம் செய்தார். திரிதெந்து திருச்சங்கத்தில் இவரது பணி மிகவும் முக்கியமானதும், போற்றுதலுக்குரியதும் ஆகும், மூன்றாம் மற்றும் நான்காம் அமர்வுகளை இவரே முன்னின்று நடத்தினார். கர்தினாலாக இருந்த அதே நேரத்தில் மிலான் உயர் மறைமாவட்ட பேராயராகவும் பொறுப்பு வகித்தார், அந்நாட்களில், இவரது  மறைமாவட்டத்தில் 3000 குருக்களும், எட்டு இலட்சம் விசுவாசிகளும் நிறைந்த பெரும் மறைமாவட்டமாகும், அதே நேரத்தில் முறையற்ற விசுவாச வாழ்வு எங்கும் காணப்பட்டது, அவற்றை சரி செய்ய முனைந்து அனைவருக்கும் மறைக்கல்வி என்ற இலட்சினையின் படி சேசு சபை குருக்களை வரவழைத்து மறைக்கல்விபணியை   மறைமாவட்டம் முழுவதும் தழைத்தோங்க செய்து மக்களின் விசுவாசத்தை முறைபடுத்தினார்.
1576இல் மிலான் மற்றும் அதன் சுற்றுப்பகுதி முழுவதையும் கொடிய கொள்ளை நோய் தாக்கியது, உயர் வகுப்பினரும், பணக்காரர்களும் மிலான் நகரை விட்டு வேற்று பகுதியில் தஞ்சம் அடைந்தனர், ஆனால் மிலானின் ஆயரான நமது புனிதரோ, அந்நகரை விட்டு அகலாமல் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பணியாற்ற வேண்டிய பணிகளை முடிக்கு விட்டு, மேலும் நோய் பரவாமல் காத்தார் என்றால் அது மிகையாகது. திரிதெந்து திருச்சங்கத்தின் ஒளியில் வழியில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டார், கத்தோலிக்க திருச்சபையில் நிலவிய பில்லி சூனியங்களை களைவதில் ஆர்வம் காண்பித்து பெரும் வெற்றியும் கண்டார், லுத்தரான், ஆங்கிலிக்கன், கால்வின் போன்ற பிரிவினை சபைகள் மக்களிடம் ஊடுருவாமல் காத்தார். விசுவாச அறிவுசார்ந்த பணியில் ஆர்வம் கொண்டு, பல குருமாணவர் இல்லங்கள், துறவற மடாலயங்கள், மறைக்கல்வி நிலையங்கள் என் பல திறந்து மக்களின் விசுவாசத்தை வளர்த்தார். இவ்வாறு நாளும் பொழுதும் திருச்சபையின் வளர்ச்சிக்கு தன்னை முழுவதுமாய் அர்பணித்த கர்தினால் ஆண்டகை சார்லஸ் போரோமியோ தனது 46வது வயதில் நவம்பர் 4, 1584இல் மரித்தார், ஆறு ஆண்டுகளுக்கு பிறகு புனிதராக உயர்த்தபட்டார்.

நவம்பர் 05
புனித எலிசபெத்
இயேசுவின் முன்னோடியான புனித திருமுழுக்கு யோவானின் தாய் புனித எலிசபெத்தின் விழாவை திருச்சபை கொண்டாடுகிறது. இவரை பற்றி புதிய ஏற்பாட்டில் புனித லூக்கா நற்செய்தியின் முதலாம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது, செக்கரியாவின் மனைவியாக வயதான தம்பதியராக இருப்பதை வாசிகின்றோம். இறைவனுக்கு அஞ்சி, அவரது வழியில் வாழ்ந்த இந்த வயோதிக தம்பதியரை கடவுளாகிய இறைவன் அவர்களை மென்மேலும் உயர்த்துவதை நாம் காணுகின்றோம்குழந்தை பெரும் வாய்ப்பினை இழந்து சமூகத்தால் மலடி என இகழப்பட்ட எலிசபத்திருக்கு இறைவன் அந்த தள்ளாடும் வயதில் மகப்பேறு அளித்து தனது வல்லமையை வெளிப்படுத்துகிறார். புனித திருமுழுக்கு யோவானை தன் கருவில் தாங்கியபோது, அவரது கணவர் செக்கரியா வயோதிக தம்பதியர்க்கு இது எங்கனம் நிகழும் என்று வானதூதரிடமே கேள்வி எழுப்பி ஊமையாய் இருந்த போதிலும்  இந்த வயதில் இவருக்கு இறைவன் காட்டிய இரக்கத்திற்காக  நன்றி கூறினார்.
புனித மரியன்னையைப்போல இறைத்திட்டதிற்கு தன்னை முழுமையாக அர்பணித்த புனிதை ஆவார். புனித  கன்னி மரியா தூய ஆவியானவரின் அருளால் இயேசுவை தன் கருவில் தாங்கியபோது, இந்த வயதான காலத்தில் தன் உறவினள் எலிசபத்திருக்கு இறைவன் காட்டிய இரக்கத்தை கொண்டாடவும், அவருக்கு உதவிடவும் மலை நாடான யூதேயாவிலுள்ள ஒரு சிற்றூருக்கு சென்றார். ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார் என்றும், உமது வரவால் எனது கருவும் மகிழ்ச்சியால் துள்ளிற்று என்றும் தூய ஆவியால் உந்தப்பட்டு இறைவாக்கு உரைத்தார் (லூக் 1: 41-45). இவ்வாறு புனித எலிசபத்தின் வாழ்த்தொலியை கேட்ட அன்னை மரியா தூய ஆவியால் உந்தப்பட்டு "என் ஆன்மா ஆண்டவராம் மீட்பரை ஏத்திப் போற்றுகின்றது என்ற பாடலினை மிகவும் உருக்கமுடன் பாடி செபித்தார் (லூக் 1: 56-64). இவ்வாறு புனித எலிசபெத் இறைவனின் மீட்பு திட்டத்தில் தன்னால் இயன்றளவு பங்களித்தார். விவிலிய குறிப்புகளைத் தவிர வேறு வரலாற்று குறிப்புகள் காணக்கிடக்கவில்லை.
நவம்பர் 06
புனித லியோனார்டு (+559)
புனித லியோனார்டு ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரான்கிஷ் பேரரசில் ஒரு பிரபுக்கள் குடும்பத்தில் பிறந்தவர். பிரான்கிஷ் பேரரசின் அரசவையில் ஒரு முக்கிய பொறுப்பை வகித்தார். கி.பி. 496 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் பெருவிழாவின் போது பேரரசர் முதலாம் குலோவிஸ் மற்றும் பேரரசின் மக்களுடன் இணைந்து கிறிஸ்தவத்தை தழுவினார். அநியாயமாக சிறையில் வாடும் கைதிகளை விடுதலை செய்யக்கூடிய அதிகாரத்தை அரசனிடமிருந்து லியோனார்டு பெற்று, குற்றம் புரியாத பலரின் விலங்குகளை முறித்து விடுதலை தந்தார். புனித ரெமிஜியுஸ் கரங்களால் திருமுழுக்குப் பெற்ற நாள் முதல் இவரது உள்ளம் ஆண்டவரை தேடுவதை உணர்ந்தார், இந்நாட்களில் இவரது ஞானத்தந்தை பேரரசர் முதலாம் குலோவிஸ் இவருக்கு ஒரு மாகாணத்தை கொடுத்து ஆளுநராக அறிவித்தார். ஆனால் ஆட்சி அதிகாரங்கள் மீது துளியும் நாட்டம் இல்லாது, ஆன்மீக வாழ்வின் மீது அதீத ஆவல் கொண்டு, ஒர்லேயன் நகருக்கு அருகிலுள்ள மிசி என்ற ஊரில் துறவு வாழ்வை மேற்கொண்டார்.
மிசி மடத்தில் துறவு வாழ்வை மேற்கொண்ட நாட்களில் அதன் அருகிலுள்ள லிமுசான் பகுதியுள்ள காடுகளுக்கு சென்று அங்கு கடும் தவத்தில் ஆழ்ந்தார். இறைவனை தேடுவதில் இயேசுவில் அமைதி காணுவதில் எல்லையில்லா இன்பம் கொண்டார். துறவியாகிய பிறகும் பல கைதிகளை விடுவித்து, அவர்களுக்கு மதிப்பு மிகுந்த மற்றும் மகிழ்ச்சியான வாழ்வை ஏற்படுத்தி தருவதில் தனி கவனமும் அக்கறையும் கொண்டார். தவத்திற்காக அடிக்கடி லிமுசான் காடுகளை நாடினாலும் அதே நேரத்தில் மக்கள் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதில் சிறிதும் சளைக்கவில்லை, பெண்கள், குழந்தைகள், ஆதரவற்றோர், ஏழைகள் மற்றும் சிறை கைதிகளுக்கு உதவுவதில் தன் வாழ்வை அர்ப்பணம் செய்தார். பேரரசரின் நெருங்கிய உறவினராய் இருந்ததாலும், அரசரிடமிருந்து பல அதிகார சலுகைகளை பெற்றதாலும், இவரால் இந்த மக்கள் நலப்பணிகளை தங்கு தடையின்றி செய்ய முடிந்தது. தனது அதிகாரத்தை ஒருபோதும் தவறாக பயன்படுத்தாமல் மக்களின் காவலராகவே வாழ்ந்த புனிதர் லியோனார்டு கி.பி. 559இல் பிரான்ஸ் நாட்டின் லிமுசான் மாகணத்தில் மறைந்தார். இவரது பக்தி ஆறாம் நூற்றாண்டு முதல் பிரான்ஸ், ஸ்பெயின், சுவிஸ், ஸ்காட்லான்ட், இத்தாலி மற்றும் பவேரியா பகுதியான ஜேர்மனி ஆகிய நாடுகளில் பரவியுள்ளதை வரலாற்றில் காணலாம்.

நவம்பர் 07
புனித வில்லிபுரோர்டு (658-739)
புனித வில்லிபுரோர்டு கி.பி. 658இல் வடக்கு இங்கிலாந்தில் நோர்த்துயும்பெரியா என்ற பகுதியில் பிறந்தவர். சிறு வயதிலே நன்கு கல்வியில் சிறந்து விளங்கினார், புனித வில்ப்ரெட் அவர்களின் தலை சிறந்த மாணவனாக அறியப்பட்டு புனித ஆசிர்வாதப்பர் சபையில் துறவறம் பூண்டார். தனக்கு இருபது வயது நடக்கும் போது அயர்லாந்து சென்று பன்னிரண்டு ஆண்டுகள் புனித இக்பர்டின் ஆலோசனையில், வழிநடத்துதலில் ஒரு சிறந்த துறவியாக தன்னை வளர்த்துக் கொண்டார். நோர்வே பகுதிலுள்ள பிரிசியா மக்கள் மத்தியில் நற்செய்தி அறிவிக்கும் பொறுப்பினை ஏற்று, 692இல் உரோமை சென்று அப்போஸ்தலிக்க மறைவட்ட கண்காணிப்பாளர் என்ற பொறுப்பினை தாங்கி தனது மறைபணியை அதிகாரபூர்வமாக ஆரம்பித்தார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பிரிசியா பகுதியின் ஆயராக பொறுப்பேற்றார், மறைவாட்டதின் பல்வேறு  பகுதிகளில் மடங்கள் மற்றும் ஆலயங்களை எழுப்பி விசுவாசத்தை வளர்த்தார். இந்நாட்டின் அரசன் பெப்பின் ஹெரிச்டால் ஆயர் வில்லிபுரோர்டு அவர்களுக்கு பல வகையில் உதவி தனது ஆளுகையின் கீழ் கிறிஸ்தவ சமய வளர்ச்சிக்கு வித்திட்டார்.
ஆனால் அரசன் பெப்பின் மறைவுக்குப் பிறகு பிரிசியர்களின் தலைவனாகிய ரட்பொட் ஆட்சிக்கு வந்தான், இவனோ கிறிஸ்தவத்தைப் பற்றி எதையும் அறியாதவன் ஆகவே, முந்தைய அரசன் கிறிஸ்தவ சமய வளர்ச்சிக்கு வழங்கிய அனைத்து சலுகைகளையும் பறித்தான், ஆலயங்களை தீயிட்டு எரித்தான்,  கிறிஸ்தவர்களை துன்புறுத்தினான் மேலும் நற்செய்தி அறிவித்த பல குருக்கள் மற்றும் இறைமக்களை கொன்றான். ஆகவே ஆயர் வில்லிபுரோர்டு குருக்கள் மற்றும் மக்களுடன் நாட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்தில தஞ்சம் அடைந்தார், கொடுங்கோலன் ரட்பொட் மூன்றே ஆண்டுகளில் இறக்க மீண்டும்  பிரிசியா பகுதிக்கு திரும்பி விசுவாசத்தை கட்டியெலுப்பினார். தனது மறைப்பணி பயணத்தின் பொது எண்ணற்ற மக்களை சந்தித்தார், குறிப்பாக நோயாளிகள் இவரால் தொடப்பட்டப் போது குணமாளிக்கும் வல்லமையை உணர்ந்தனர், அதிலும் குறிப்பாக நரம்பு சம்பந்தப் பட்ட நோய்களை குணமாக்குவதில் சிறப்பான அருளை கொண்டிருந்தார். இறைப்பணியால் தன் வாழ்வை அமைத்துக்கொண்ட ஆயர் வில்லிபுரோர்டு தனது 81வது வயதில், கி.பி. 739 ஆம் ஆண்டு  நவம்பர் 7 ஆம் நாள் லுக்ஷெம்பௌர்க் நாட்டில் மரித்தார்.

நவம்பர் 08
புனித கஸ்தோரியஸ்
கஸ்தோரியஸ், கிலவோதியஸ், நிக்கோஸ்திராதுஸ் மற்றும் சிம்போரியன் ஆகிய நான்கு பேரும் மூடிசூட்டப்பட்ட மறைச்சாட்சிகள் என்று போற்றப்படுகின்றனர்.  இந்த மறைச்சாட்சிகள் நால்வரும்  இரண்டு மற்றும் மூன்றாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர்கள், தியோகிலசியன் ஆட்சியில் மிகவும் கொடூரமாக துன்புறுத்தப்பட்டு ஹங்கேரி நாட்டிலுள்ள பன்னோனியா என்ற இடத்தில்  தலை துண்டிக்கப்பட்டு கிறிஸ்துவுக்காக மரித்தவர்கள். சிற்பக் கலையில் கைதேர்ந்தவர்கலான இவர்கள் நால்வரையும் அரசன் தியோகிலசியன் இன்றைய யுகோஸ்லாவிய நாட்டில் சிரிமும் என்ற இடத்தில் சிற்ப்பங்களை செதுக்கும் பணியில் அமர்த்தினான். கல்லிலே கலைவண்ணம் கண்டான் என்ற பழமொழிக்கேற்ப மிக அழகாக, நேர்த்தியாக, தத்துருவமாக சிற்ப்பங்களை வடித்தனர். இவர்களின் சிற்ப நேர்த்தியைக் கண்ட அரசன் மேர்சிலிர்த்து மயங்கினான், மேலும் பல நுட்பமான வேலைகளை கொடுத்து எல்லையில்லா இன்பம் கொண்டான், அவ்வாறு ஒரு முறை,  குணமளிக்கும் கிரேக்க கடவுள்
அஸ்கிலாபியஸ் சிற்பத்தை வடிப்பதற்கு கிறிஸ்தவர்களாகிய இவரகள் நால்வரும் மறுத்தனர், அவர்களின் விருப்பதிற்கேற்ப அரசன் அவர்களை கட்டாயப்படுத்தவில்லை. ஆனால் அரசன் தன் கடவுளை மதிக்காத  அவர்களுக்கு எதிராக பெரும் வன்மத்தை கொண்டிருந்தான், அதை, அவர்கள் தங்கள் சிற்ப வேலைப்பாடுகள் அனைத்தும் முடித்தப்பிறகு தன கோர முகத்தை காட்டினான். கிரேக்க கடவுளுகளுக்கு பலி செலுத்தவும், ஆராதிக்கவும் கட்டாயப்படுத்தப்பட்டனர், அவர்களை கட்டாயப்படுத்த லம்பாதியுஸ் என்ற போர் வீரன் பொறுப்பேற்றான், அவன் அவர்களை கட்டாயப்படுத்தும் போது திடிரென இறந்து போனான். இவ்வாறு இறந்து போனதால் அவனுடைய உறவினர்கள் அரசனையும், இந்த நான்கு கிறிஸ்தவ சிற்பிகளையும் குற்றம் சாட்டினர், உடனே அரசன் தான் தப்பித்துக்கொள்ள இவர்கள் நால்வரையும் பலிகிடக்கினான். உயிரே போனாலும், ஒரு போதும் கிறிஸ்துவை தவிர வேறு எந்த சக்திகளுக்கும்  வணக்கம் செலுத்துவதில்லை என்று உறுதியாய் இருந்து உயிர் துறந்தனர். இவர்கள் நால்வரைரும் இன்று திருச்சபை நினைவு கூர்ந்து இவர்களின் வழியில் கிறிஸ்துவுக்கு சான்று பகர நமக்கு அழைப்பு விடுக்கிறது.

நவம்பர் 09
புனித பெனிநூஸ்
பெனிநூஸ் அயர்லாந்தை சேர்ந்த நான்காம் நூற்றாண்டு புனிதர் ஆவார், இவருடைய தந்தை செசேனன் இங்கிலாந்தின் பாதுகாவலர் எனப் போற்றப்படுகிற புனித பாட்ரிக் அவர்களால் திருமுழுக்குப் பெற்றவர், மேலும் அவருக்கு உதவியாக ஆலயத்தில் திருப்பாடல்களை இசைத்து வந்தார். இவ்வாறு பெனிநூஸ் சிறு வயது முதலே முறையான கிறிஸ்தவ விசுவாசத்தால் வளர்க்கப்பட்டவர், இயேசுவின் வாழ்வால் பெரிதும் உந்தப்பட்டவராக தன்னை வளர்த்துக்கொண்டார். தந்தையை போல பெனிநூசும் புனித பாட்ரிக் அவர்களால் நேரடியாக விசுவாசத்தில் வளர்க்கப்பட்டார், இனிய குரல் வளத்தால் இறைவனை அனுதினமும் திருப்பாடல்கள் மூலம் போற்றி புகழ்ந்து வந்தார். ஆலயத்தில் பாடல் குழுவினரின் பொறுப்பை ஏற்று அதை மிகவும் சிறப்புடன் நடத்தி ஆயர் பாட்ரிகுவுக்கு செபத்தை வழிநடத்த உதவினார். குருத்து வாழ்வை மேற்கொண்டு அர்மாக் பேராலயத்தின் அதிபராக பணியாற்றினார். ஆலயங்களில் இனிய பாடல்கள் மூலம் இறைவனை துதிக்க பல்வேறு பாடல்களை எழுதி அதை இசைத்து நூல்களாக தொகுத்து பாடர்களுக்கு வழங்கினார். புனித பாட்ரிக் மறைவுக்கப் பிறகு, அயர்லாந்தின் ஆயராக பொறுப்பேற்று பல புதிய கிறிஸ்தவர்களை உருவாக்கினார். ஆலயத்தில் இசைக்கருவிகளை உருவாக்குவதிலும், அமைப்பதிலும் தன் வாழ்வை முழுமையாக அர்ப்பணித்த புனித பெனிநூஸ் கி.பி. 467இல் இறந்தார்.



நவம்பர் 10
புனித பெரிய சிங்கராயர் (400-461)
திருத்தந்தை புனித லியோ தமிழில் பெரிய சிங்கராயராக அறியப்படுகிறார். இவர் கி.பி. 400 இல் இத்தாலியில் துஸ்கனி நகரில் மிகவும் புகழ்பெற்ற பிரபுக்கள் குடும்பத்தில்  பிறந்தவர். திருச்சபையின் தலைசிறந்த இறையியல் வல்லுனர்களில் ஒருவராக போற்றப்படுகிறார், கிறிஸ்தியல் பற்றிய கோட்பாட்டு உருவாக்கத்தில் இவரது பங்களிப்பு தனித்துவம் வாய்ந்தது. கி.பி. 440 முதல் கி. பி. 461 வரை திருதந்தையாக திறம்பட வழிநடத்தி அக்காலத்தில் பரவி மக்களின் விசுவாசத்தை குழப்பிய தப்பரைகளை தகர்தெறிந்து உண்மையான விசுவாசதிற்க்கான தெளிவான பாதையை அமைத்தார். கி.பி. 451இல் கால்சிடேன் திருச்சங்கத்தை கூட்டி, கிறிஸ்தியல் பற்றிய  நீண்ட நெடிய விவாதமிட்டு, கிறிஸ்து இறைத்தன்மையும், மனிதத்தன்மையும் ஒரு சேர ஒருங்கிணைத்த ஒரு மனிதர், ஆகவே அவர் இருவர் அல்ல மாறாக ஒரே ஆள் என்ற கிறிஸ்தியல் கோட்பாட்டினை இறைவார்த்தையின் ஒளியில் எடுத்து கூறினார்.
இறைதன்மையிலும், மனிததன்மையிலும் எவ்வித குறைபாடுமின்றி முழு ஆற்றலும், முழு தகுதியோடும் விளங்கும் ஒரே ஆளாக கிறிஸ்து வாழுகின்றார். இறைவனும் மனிதனும் ஆனா ஒரே ஆளாகிய கிறிஸ்து திருச்சபையில் முழுமையாக பிரசன்னப்பட்டு அதன் இதயமாகவும், உயிராகவும் இருந்து விசுவாசிகள் என்ற திருவுடலை இயக்குகின்றார் என்பதை இறைவார்த்தை, திருச்சபை பாரம்பரியம், திருச்சபையின் விளக்கங்கள், திருவருட்சாதனங்கள் மற்றும் திருவிழாக்கள் வழி நின்று தெளிவுபடுத்தினார். கிறிஸ்து மீட்பர், தனது மனுவுருவாள் இந்த மானிடத்தை முழுமையாக்கி அதற்கு செம்மையான பாதையை அமைத்து தந்தவர், பாவத்தினின்று விலகி மீட்பு பாதைக்கு அழைத்து சென்றவர் என்று கிறிஸ்துவின் மீட்பு திட்டத்தை மக்கள் எளிதாக புரிந்து வாழ வழி வகுத்தவர் புனித சிங்கராயர். திருத்தந்தை இரண்டாம் சிக்ஸ்துஸ் மறைவுக்குப் பிறகு, இவர் திருச்சபையின் தலைவராக தெரிவு செயப்பட்டார், அதிலும் குறிப்பாக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது சிங்கரயார் அன்று உரோமையிலே இல்லை, இருப்பினும் அனைவரும் இவரில் நம்பிக்கை வைத்தனர், அது வீண் போகவில்லை என்பதை அவரது அர்ப்பண வாழ்வு திருச்சபையை அடுத்த நிலைக்கு எடுத்து சென்றது. இது ஒரு மாபெரும் வரலாறு, ஆகவேதான் முதல் முறையாக சிறப்பாக பணியாற்றிய திருதந்தையர்களுக்கு ‘பெரிய’ என்ற அடை மொழி அல்லது பட்டம் வழங்கலாயிற்று.
உரோமை ஆட்சியாளர்களுடன் நல்லுறவைப் பேணி, திருச்சபையின் வளர்ச்சிக்கு பல்வேறு சலுகைகளை பெற்றார். பெலேஜியனிசம் என்ற தப்பறை இவரது காலத்தில் வேகமாக பரவியது, அதாவது, நமது மீட்புக்கு இறையருள் தேவையற்றது, மாறாக  இறைவன் யாருக்கு தனது மீட்புக்கான ஆசீரை முன் குறித்து வைத்திருக்கிறாரோ அவரகள் மட்டுமே மீட்படைவர் என்றனர். இத்தகைய கிறிஸ்துவின் நற்செய்திக்கு எதிரான தப்பரைகளை  தகர்த்தார். இவ்வாறு திருச்சபையில் மாபெரும் புரட்சிகளை இவர் மேற்கொண்ட நேரத்தில் உரோமை பேரரசு அரசியல் குழப்பங்களால் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் சிக்கி தவித்தது. கிழக்கு உரோமை பேரரசர் இரண்டாம் தியோடிசியஸ்  கி. பி. 450இல் மறைந்தார், மேற்கு பேரரசை ஹண் வம்சத்து பேரரசன் அத்திலா உரோமைக்கு வடக்கேயுள்ள அரசுகளை கைப்பற்றி உரோமை நகரை நோக்கி முன்னேறினான். மிகவும் வலியாவனும், கொடியவனுமாகிய அத்தில்லாவை எதிர்கொள்ள உரோமை கிழக்கு  பகுதியின் பேரரசன் மூன்றாம் வலேசினியன் அஞ்சினான், அவனோடு சமாதானமாக போகிவிட விரும்பி  தூது அனுப்பினான். பல தூதர்கள் அத்திலாவிடம் பேசியும், அவன் பேரத்தில் பணியவில்லை, இறுதியாக திருத்தந்தை பெரிய சிங்கராயரே அவனிடம் நேரடியாக பேசினார், சாதித்தார் உரோமைக்கு வந்த பேரழிவை காத்தார். நெருக்கடியான அந்த நேரத்தில் சிங்கராயரே உரோமை பேரரசை வழி நடத்தி ஒரு சிறப்பான அரசியல் தலைவராகவும் விளங்கினார். இவ்வாறு இறையியல் அறிவிலும், ஆன்மீகத்திலும், பல விதமான ஆற்றலிலும் சிறந்திட்ட புனித பெரிய சிங்கராயர் நவம்பர் 10, 461இல் மறைந்தார்.

நவம்பர் 11
தூர் நகர் புனித மார்டின்
தூர் நகர் புனித மார்டின் கி.பி. 316இல் சொம்பத்திலி என்ற ஊரில் ஹங்கேரி நாட்டில் பிறந்தார், தனது சிறுவயது காலத்தை இத்தாலியின் பவியாவிலும், பின்பு பிரான்ஸ் நாட்டில்  தான் வாழ்நாள் முழுவதையும் கழித்தார். இவர் ஐரோப்பாவின் ஆன்மீக பாலமாக அறியப்படுகிறார், மேலும் தொடக்ககால திருச்சபையின் தலை சிறந்த புனிதர்களில் ஒருவராக கொண்டாடப்படுகிறார். இவரது தந்தை உரோமை பேரரசில் பவியா பகுதியில் நிறுத்தப்பட்ட குதிரை படையில் முக்கிய பதவியை வகித்தார், இந்நகரில்தான் சிறுவனான மார்டின் வளர்ந்து வந்தார், தனது பத்தாவது வயதிலே பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக கிறிஸ்தவ விசுவாச விரும்பியாக தன்னை பதிவு செய்துக்கொண்டார். 313இல் ரோமை பேரரசில் சட்டபூர்வ சமயமாக கிறிஸ்தவம் ஏற்றுக்கொண்ட பிறகு, உரோமை பேரரசின் கிழக்கு பகுதியிலிருந்து மேற்கிற்கு கிறிஸ்தவ விசுவாசம் யூத மற்றும் கிரேக்க வணிகர்களால் பெரிதும் எடுத்து செல்லப்பட்டது.
தந்தையின் வழியில் தனயனும் குதிரை படையில், அவரது பதினைந்தாவது வயதில் சேர்ந்தார், ஆனால் இப்பணி கிறிஸ்தவ நெறிகளுக்கு எதிராக இருப்பதை அறிந்து,  நான் இயேசுவின் போர் வீரன், ஆகவே மனிதர்களை கொல்லும் பணியை என்னால் எப்படி நிறைவேற்ற முடியும் என்று இரண்டு ஆண்டுகளிலே இப்போர் பணியிலேருந்து விலகினார். ஒரு முறை  யமியன்ஸ் என்ற பகுதியில் குதிரை படை வீரர்கள் படைத்தளம் அமைத்து பயிற்சியில் இருந்தனர், அப்போது மார்டின் ஒரு நாள் குதிரையில் காட்டுப்பகுதி வழியாக பயணம் மேற்கொண்டிருந்தார், காட்டு செடி, கொடிகள், மரங்கள், காய் கனிகள் யென்று இயற்கையின் அழகில் மயங்கி ரசித்தார். இவ்வாறு பார்த்தவாறு வந்த போது திடிரென்று முழுவதும் ஆடையின்றி ஒரு வயோதிக ஏழை கடும் குளிரால் வாடுவதை கண்டு, மனம் கலங்கி, தன்னுடைய மேலாடையின் ஒரு பகுதியை கிழித்து அவருக்கு போர்த்தி அவரது குளிரின் கொடுமையை குறைத்து அவ்வழியே சென்றார். இரவு தூங்கும் போது ஒரு கனவு கண்டார், அக்கனவில், தான் அந்த ஏழைக்கு போர்த்திய மேலாடையை இயேசு தன் உடலில் போர்த்தியவாராய் காட்சிக் கண்டார், திடிக்கிட்டு எழுந்து பெரும் இறை அச்சம் கொண்டார், அன்று முதல் இறைப்பணியில் தன்னை இணைத்துக்கொள்ள முடி வெடுத்தார்.
ஆன்மீக வாழ்வின் மீது நாட்டம் கொண்டு ஹிலாரி போத்தியே என்ற துறவியின் வழிக்காட்டுதலின் படி பிரான்ஸ் நாட்டின் தூர் நகரில் துறவு பூண்டார். ஆல்ப்ஸ் மலை கடந்து மிலன் வழியாக சொந்த ஊருக்கு சென்று, தனது தாய், உறவினர்கள் மற்றும் பலரை கிறிஸ்தவ மெய்மறையில் சேர்த்தார், ஆனால் தந்தையை மட்டும் அவரால் கிறிஸ்தவராக்க இயலவில்லை. மீண்டும் தூர் நகரம் திரும்பி, ஒரு மடாலயத்தை நிறுவி, கௌல் பேரரசு முழுவதும் கிறிஸ்தவத்தை எடுத்து செல்வதில் பெரும் பங்காற்றினார், 371இல் தூர் மறைமாவட்ட ஆயராக நிமிக்கப்பட்டார். பிரான்சில் அந்நாட்களில் பரவியிருந்த பல்வேறு மதங்கள், சடங்குகள் ஆகிய பிளவுகளை அழித்து அனைவரையும் கிறிஸ்துவின் பெயரால் ஒன்று திரட்டினார். இவர் பிரான்சில் காந்து-புனித மர்தான் என்ற இடத்தில் 397 இல் மரித்தார்.

நவம்பர் 12
புனித யோசபாத்து (1580-1623)
புனித யோசபாத்து, இன்றைய உக்ரைன் நாட்டில் வோல்னியா பகுதியில் வோல்திமிர் என்ற நகரில் 1580இல் பிறந்தவர், இவர் உக்ரேனியன் கிரேக்க கத்தோலிக்க திருச்சபையை சார்ந்தவர். இவரது குடும்பம் மிகவும் இறைபக்தி நிறைந்தது, அதன் பின்னணியில் இவரும் வளர்க்கப்பட்டார், மேலும் இவருடைய பெற்றோர்கள்  தனது மகனுக்கு சமயகல்வி கற்பிபதிலே ஆர்வம் கொண்டனர். இவரது தந்தை ஒரு வணிகர், அந்த நாட்டில் மட்டுமின்றி அருகிலுள்ள நாடுகளுக்கும் தனது வணிகத்தை விரிவு  படுத்தினார், அப்போது வியாபாரத்தில் பெரும் நட்டம் ஏற்பட்டதால் மகனையும் சேர்த்துக் கொண்டார். இதனால் யோசபாத்தின்  சமயம் சார்ந்த கல்வியில் பின்னடைவை சந்தித்தாலும், வணிக ரீதியாக பல்வேறு கிறிஸ்தவ பிரிவுனரை, அதாவது ரோமன் கத்தோலிக்கர், அம்புரோசியன் கத்தோலிக்கர், பல்வேறு கிரேக்க மற்றும் ருசியன் அடிப்படைவாத திருச்சபையினர் என சந்தித்தார். இவ்வாறு சந்தித்த போது இந்த அனைத்து சபையினரும் ஒரே குடையின் கீழ் வர வேண்டும் என்ற எண்ணம் அன்றே அவருக்கு பிறந்து.
சில ஆண்டுகளுக்கு பிறகு ஆன்மீக வாழ்வை தெரிந்து 1604இல் விளினியுஸ் என்ற இடத்தில் பசிலியன் துறவற சபையில் இணைந்தார். 1609இல் குருவாக அருட்பொழிவுப் பெற்றார், அந்நாள் முதல் தன்னுடைய புனித வாழ்வினால் பல இளையோரை இறைவன் பக்கம் திருப்பி அதிலும் குறிப்பாக பசிலியார் சபைக்கு ஏராளமான இறை அழைத்தல்கள் பெற பெரும் உந்து சக்தியாக திகழ்ந்தார். யோசபாத்து சிறுவயதிலிருந்தே மிகுந்த இறைபக்தி கொண்டிருந்தார். அவருக்குப் பிடித்தமான இறைவேண்டல் கீழைத் திருச்சபையின் துறவற இல்லங்களில் வழக்கமாக பயன்பட்ட ஒரு வேண்டல் ஆகும். ஆண்டவராகிய இயேசு கிறித்துவே, பாவியாகிய என்மேல் இரக்கமாயிரும்! என்னும் அந்த இறைவேண்டலை அவர் அடிக்கடி செபித்துவந்தார். அவர் மாமிச உணவு அருந்தியதில்லை. விரதம் இருப்பதும் உடலை ஒறுப்பதும் அவரது வழக்கம். வெறும் தரையில் உறங்கினார். ஏழைகளை சந்தித்து அவர்களுக்கு உதவி செய்தார்.
அக்காலக் கட்டத்தில்தான் ருதேனியன் என்ற உக்ரேனியன் கிரேக்க கத்தோலிக்க திருச்சபையிலும் பல்வேறு புரட்சிகரமான மாற்றங்கள் நிகழ ஆரம்பித்தன. இவரும் அப்போதைய காலத்திலே 1618 இல் போலோட்ஸ் உயர் மறைமாவட்ட பேராயராக நியமனம் பெற்றார், பண்டைக்காலத் திருச்சபையின் வழிபாட்டு முறைகள், திருச்சபைத் தந்தையர்களின் படிப்பினைகள் ஆகியவற்றையும் வரலாற்றையும் ஊன்றிப் பயின்ற யோசபாத்து, ஆண்டவர் இயேசு நிறுவிய திருச்சபையில் பேதுருவின் வாரிசாக வருகின்ற திருத்தந்தைக்கு ஒரு முக்கிய இடம் ஒன்று உண்டு என்றும், அவருடைய தலைமையின் கீழ் திருச்சபை முறையாக அமைய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். உரோமைத் திருச்சபையோடு உக்ரேய்ன் மரபுவழி திருச்சபையை ஒன்றுபடுத்தும் பணியில் அவர் மும்முரமாக ஈடுபட்டார். பலர் அவருடைய முயற்சியை எதிர்த்தனர். ரோமன் கத்தோலிக்க திருச்சபையோடு நல்லிணக்கம் பாராட்டவும், கத்தோலிக்கர் மத்தியில் ஒற்றுமை பேணவும் பெரும்பாலான உக்ரேனியன் கத்தோலிக்கர் ஆதரவுடன் புதிய வடிவில் மறைக்கல்வி நூல்களை வெளியிட்டார்.
இவருடைய முயற்சிக்கு ஆள்வோரின் ஆதரவும் கிடைத்தன, மேலும் பலதரப்பட்ட  மக்களும் தங்கள் ஆதரவை நல்கினர். ஆனால் சிலர் அவர் மட்டில் காழ்ப்புணர்வு கொள்ளலாயினர். அவர் உக்ரேனிய சபையை முற்றிலுமாக உரோமை மயமாக்க முயற்சி செய்ததாக அவர்மீது குற்றம் சாட்டினர். உக்ரைனியன் திருச்சபையை ரோமன் கத்தோலிக்க திருச்சபையோடு இணைத்து விட  ஆயர் யோசபாத்து முயற்சிக்கிறார் என்ற தவறான புரிதலால் சிலர்  பல்வேறு கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர். இக்கிளர்ச்சியின் கோபத்தால் ஒரு சிலர் நவம்பர் 12, 1623 அன்று அத்துமீறி ஆயரின் இல்லத்தில் நுழைந்து, ஆயர் யோசபாத்தை  கடுமையாக தாக்கி அவரை அரிவாளால் வெட்டினர், பின்பு துப்பாக்கியால் சுட்டு கொடிய முறையில் அவரைக் கொன்று அவருடைய சடலத்தை ஆற்றில் வீசி எறிந்தனர். பின்பு அவருது  உடல் கண்டெடுக்கப்பட்டு ரோமை புனித பேதுரு பேராலயத்தில் நல்லடக்கம்   செய்யப்பட்டது. உக்ரேனிய கிரேக்க கத்தோலிக்க திருச்சபையின் ஆயராக இருந்து திருச்சபையின் ஒற்றுமைக்காக உழைத்து மறைச்சாட்சியாக மரித்த ஆயர் யோசபாத்தை, திருத்தந்தை ஒன்பதாம் பத்திநாதர் 1867இல் புனிதர் நிலைக்கு உயர்த்தினார்.
நவம்பர் 13
புனித பிரான்சிஸ் சேவியர் கபிரினி (1850 -1907)
அருட்சகோதரி கபிரினி 1850 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் நாள் இத்தாலியுள்ள புனித ஆஞ்செலொ லொதின்சியா நகரில் ஏழை பெற்றோருக்கு பதினோரு குழந்தைகளில் கடைசியாக பிறந்தார். இவர் பிறந்த நாள் முதல் மிகவும் பலவீனமான உடல் நிலையை பெற்றிந்ததால், அடிக்கடி நோய்வாய்ப்பட்டார். 1870 இல் துறவற வாழ்வில் ஆர்வம் கொண்டு சிறு வயதில் தனக்கு கல்வி படிப்பித்த திரு இதய சகோதிரிகள் சபையில் இணைந்திட விண்ணப்பித்தார், ஆனால் அச்சபையினரோ இவரது உடல்நிலயை கருத்தில் கொண்டு இவரை ஏற்றுக்கொள்ள  மறுத்துவிட்டனர். மனம் தளராத கபிரினி கோதொக்னோ என்ற இடத்தில் இயங்கிய அனாதை இல்லத்தின் தலைமை பொறுப்பேற்று அந்த பணியின் மூலம் மேலும் சில பெண்களை சேர்த்து அவர்கள் உதவியுடன் 1880இல் திரு இதய ஆண்டவரின் மறைபரப்பு சகோதரிகள் என்ற சபையை நிறுவினார். ஏழைகளுக்கு இலவச கல்வி என்ற இலக்குடன் சபையை நிறுவி, முதலில் ஏழு மடங்களை இத்தாலியில் திறந்தார், மேலும் திருத்தந்தை பதிமூன்றாம் சிங்கராயரின் ஒப்புதலையும் பெற்றார். மேலும் சீனாவில் தனது சபையின் பணியை ஆற்றிட திருத்தந்தையின் ஒப்புதலை கேட்டார், ஆனால் திருதந்தையோ, அவரது சபையை அமெரிக்கா சென்றிடவும், அங்கு குடியேறி மிகவும் வறுமையில் வாடும் இத்தாலியர்களுக்கு பணியாற்றிட பணித்தார். திருத்தந்தையின் வார்த்தையின்படி 1889 இல் தனது தலைமையிலே திரு இதய ஆண்டவரின் மறைபரப்பு சகோதரிகளின் ஒரு குழுவை அழைத்து சென்று நியூயார்க் நகரில் தங்கள் முதல் இல்லத்தை நிறுவினார். அமெரிக்கா சென்று சில ஆண்டுகள் வரையும் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தார், ஆயர்களின் உடனடி உதவி கிடைக்காததால் கடும் பின்னடைவை சந்தித்தார், பிறகு உறுதியாக நின்று பல இடங்களில் அனாதை இல்லங்களை நிறுவி மக்களுக்கு உதவி செய்தார். இவர் தனது வாழ்நாளிலே 67 பிறரன்பு இல்லங்களை அமைத்து சிறப்பான முறையிலே இயேசுவின் அன்பு ஆற்றினார், தனது 67வது வயதில் டிசம்பர் 22, 1907இல் நியூயார்க் நகரில் மரித்தார், இன்றும் இவரது உடல் அழியாமல் மக்களின் வணக்கத்திற்காக நியூயார்க் கபிரினி இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. மறைப்பணிக்காக சகோதரிகள் சபையை நிறுவியபோது, தனது வார்தைப்பாட்டின் நேரத்தில் மறைப்பரப்புக்கு பாதுகாவலரான புனித பிரான்சிஸ் சேவியர் பெயரை தனது துறவற பெயராக ஏற்றுக்கொண்டு, வரலாற்றில் புனித பிரான்சிஸ் சேவியர் கபிரினி என அறியப்படுகிறார்.

நவம்பர் 14
புனித துப்ரிசியுஸ் (465-550)
புனித துப்ரிசியுஸ் இங்கிலாந்தின் வெல்ஷ் பகுதியில் கி.பி.465இல் பிறந்தவர், ஏற்க்ய்ங் பகுதியில் நற்செய்தி பணியை மேற்கொண்டு, பலரை கிறிஸ்துவின் பக்கம் திருப்பினார். இவரது தாய் எப்ரிடில் ஏற்க்ய்ங் அரசரின் புதல்வி ஆவார், இவர் முறையற்ற வகையில் கருவுற்ற இருப்பதை அறிந்த அரசர் பெய்பியோ, மிகவும் வெட்கி தலைகுனிந்து தனது நிறைமாத கருப்பிணி மகளை வே ஆற்றில் தள்ளி சாகடிக்க முயற்சித்தார், ஆனால் எப்ரிடில் தப்பித்து துப்ரிசியுஸ் என்ற தனது அன்பு மகனை பெரும் துன்பத்தினிடையில் ஈன்றெடுத்தார். பின்பு மகளையும், பேரனையும் அரசன் மன்னித்து ஏற்றுக்கொண்டார், பேரன் துப்ரிசியுசை தன் கரங்களால் தூக்கி கொஞ்சியபோது, அவரது நீண்ட நாளைய தொழுநோய் நீங்கி குணம்பெற்றார்.  வளர்ந்த வந்த சிறுவன் துப்ரிசியுஸ் ஆன்மீக வாழ்வின் மீது பெரும் ஆர்வம் கொண்டு, பின்னாட்களில் துறவுவாழ்வை மேற்கொண்டார். ஹென்ட்லாந்து மற்றும் மொச்கிஸ் போன்ற பகுதிகளில் இறைவார்த்தையை  புனிதர்கள் வாழ்வின் மூலம் எடுத்துரைத்து கிறிஸ்தவத்தை வளர்த்தார். பின்பு ஏற்க்ய்ங் மறைமாவட்ட ஆயராக தேர்வு செய்யப்பட்டு சிறப்பாக பணியாற்றினார், இறை அழைத்தலை  ஊக்கபடுத்தி பலரை குருவாக அருட்பொழிவு செய்து, நற்செய்தி பணியை நாடெங்கும் எடுத்து சென்றார். சிறு வயது முதல் குணமளிக்கும் அறிய வரம் பெற்றிருந்த துப்ரிசியுஸ் அந்த புனித பணியை தான் வாழ்நாள் முழுவதும் ஆற்றினார். இவ்வாறு புனித வாழ்வால் ஏற்க்ய்ங் அரசுப்பகுதியில் நற்செய்தியை பரப்பிய புனித துப்ரிசியுஸ் 550 இல் மரித்தார்.

நவம்பர் 15
புனித பெரிய ஆல்பெர்ட் (1193-1280)
புனித பெரிய ஆல்பெர்ட்  சுவாமிநாதர் சபையை சேர்ந்தவர், திருச்சபையின் மறைவல்லுனர்களில் ஒருவராக போற்றப்படுகிறார். ஜெர்மனியின் பவேரியா மாகணத்தில் லோவேஞ்சின் என்ற ஊரில் போலேச்டடே பிரபுக்கள் குடும்பத்தில் 1193 ஆம் ஆண்டு பிறந்தார், ஆனால் 1200இல் பிறந்தார் என்றும் சில வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். பதுவா பல்கலைகழகத்தில் அரிஸ்டாடில் தத்துவயியலில் உயர் படிப்பு பெற்றார், பின்பு கனவில் அன்னை மரியாவின் உந்ததலின் பேரில் துறவுவாழ்வில் ஆர்வம் கொண்டு சுவாமிநாதர் சபையில் சேர்ந்தார். இவரது இறை அழைத்தலுக்கு இவரது மொத்த குடும்பம் எதிராக இருந்தனர், ஆனால் அவற்றை எல்லாம் சரி செய்து துறவியானார், தன் வாழ்நாள் முழுவதும் இறையியலில் பேராசியர்ராக கோலோகனே என்ற சுவாமிநாதர் சபை கல்லூரியில் பணியாற்றினார். ரீகன்பூர், பிரெயபூர், ஸ்ட்ராஸ்பூர் போன்ற நகரங்களில் இயங்கிய பல்கலைகழகங்களில் சிறப்பு பேராசியர்ராக பணியாற்றினார், 1245இல் இறையியலில் முனைவர் பட்டம் பெற்றார். பாரிஸ் பல்கலைகழகத்தில் இறையியல் பாடங்கள் நடத்தினார், இந்நாட்களில் வருங்காலத்தில் திருச்சபையின் மாபெரும் மறைவல்லுனர் எனப் போற்றபெரும் புனித அக்குவினாஸ் தோமையார், இவருடைய மாணவராகயிருந்து இறையியல் பாடங்களை கற்றுக்கொண்டார். அரிஸ்டாடில் தத்துவத்தின் அடிப்படையில் ஆல்பெர்ட் தனது இறையியல் வாதங்களை கட்டியெலுப்பினார், அதன் வெளிச்சத்தில் இறையியல் விளக்கங்களை எடுத்து வைத்தார். 1254இல் சுவாமிநாதர் சபையில் மறைமாநில அதிபராக தெரிவு செய்யப்பட்டார் பின்பு 1260இல் ரீகன்ச்பூர் ஆயராக நியமிக்கப்பட்டார். தனது எழுத்தாலும், படிபினையாலும் திருச்சபையின் விசுவாச படிப்பினையை மிக எளிதாக புரிய வைத்து பல சிறந்த இறையியல் மற்றும் தத்துவயியல் மாணவர்களை உருவாக்கி திருச்சபையின் கோட்பாட்டியியலுக்கு வலுவூட்டினார். இவர் நவம்பர் 15 அன்று 1280 இல் மரித்தார்.

நவம்பர் 16
புனித அசிசி ஆக்னெஸ் (1197-1253)

புனித அசிசி ஆக்னெஸ், புனித அசிசி கிளராவின் உடன் பிறந்த சகோதிரி ஆவர், இவர் இத்தாலி நாட்டில் 1197இல் அசிசி நகரில் வாழ்ந்த பிரபு  தெல்லோபின் மகளாக பிறந்தார். இவருடைய காலத்தில் இத்தாலியில் தொடங்கி பதிமூன்றாம் நூற்றாண்டில் திருச்சபை முழுவதும் மாபெரும் புரட்சியை ஏற்படுத்திய புனித அசிசி பிரான்சிஸ் ஏழ்மை எளிமை வாழ்வால் இவருடைய அக்காள் புனித அசிசி கிளாரா பெரிதும் ஈர்கப்பட்டு அவருடைய வழியில் வீட்டை விட்டு வெளியேறு துறவு வாழ்வு பூண்டு, ஏழை சகோதரிகள் என்ற சபையை நிறுவினார். இச்சபையை புனித பிரான்சிஸ், கிளாராவின் துணையோடு பெண்களுக்கென நிறுவினார், இது பிரான்சிஸ்கன் இரண்டாம் சபை என்று அழைக்கப்படுகிறது. தனது சகோதரியை தொடர்ந்து ஆக்னேசும் மாபெரும் மாளிகை வாழ்வை விட்டு வெளியேறி துன்பும், ஏழ்மையும் வாட்டும் எளிய சகோதரிகள் சபையில் சேர்ந்து வறியவர்களுக்கு வாழ்வதில் மகிழ்ச்சிக் கொண்டார். இவ்வாறு இரண்டு மகள்களும் துறவு வாழ்வை மேற்கொண்டதால் இவருடைய தந்தை மிக கோபம் கொண்டு ஒரு படையை அனுப்பி இருவரையும் வீட்டுக்கு மீட்டெடுக்க உத்தரவு பிறப்பித்தார்.  அப்படையினர் எவ்வளவோ முயன்றும் அந்த ஏழை மடத்திருக்கு சிறு சேதாரம்  கூட அவர்களால் ஏற்படுத்த முடியவில்லை. ஆக்னெசின்  மாமன் மகன் இவரை வலுக்கட்டயமாக தூக்கி செல்ல முயன்றான் ஆனால் இவருடைய எடையோ பன்மடங்கு உயர அவன் எவ்வளவோ முயன்றும் ஒரு சிறுளவு கூட அசைக்க முடியவில்லை. அடித்தும், உதைத்தும் பார்த்தான் ஆனால் நமது புனிதையோ திருபீடத்தை அழுத்தி பிடித்தவராய் செபித்துக் கொண்டே இருந்தார், இறுதியாக அவருடைய முக்காடை பிடித்து இழுக்க அங்கு தலை முடி  முழுவதும் மழித்து  மொட்டையாக இருப்பதை பார்த்து அவன் அதிர்ந்து போனான். மற்றவர்களோ இவ்வளவு முயன்றும் ஒன்றுமே செய்ய முடியவில்லையே இது இறைவனால் ஆனது என்று அனைவரும் வந்த வழியே திரும்பினர். இவ்வாறு  புனித கிளராவும், புனித ஆக்னசும் அன்று இறைவனின் அருளால் தங்களுது புனிதமான துறவு வாழ்வை புனித அசிசி பிரான்சிசின் வழிக்காட்டுதலில் துவங்கினர். ஊருக்கு வெளியே உதறி தள்ளப்பட்டு, உயிரோடு போராடிக்கொண்டிருந்த தொழு நோயாளிகள் மத்தியில் இவரும் ஏனைய  ஏழை சகோதரிகள் சபையினரும் பணியாற்றினார். சுகமான வீட்டில் பிறந்து வாழ்ந்து இயேசுவின் உண்மையான அன்புக்கு சான்று பகர்ந்திட தானே விரும்பி இவ்வாழ்வையும், இப்பணியையும் ஏற்றார். தொழு நோயாளிகளின் அழுகிய புண்களின் அழுக்ககற்றி, அவர்களை குளிப்பாட்டி, புண்களுக்கு மருந்திட்டு, உணவை வழங்கி அவர்களோடு உறவாடுவதில் இன்பம் கொண்டார். இவ்வாறு அன்றைய சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட மக்களோடு  உண்மையான தோழமை கொண்டு திருச்சபைக்கு புதிய வழியை உருவாக்கினார். நவம்பர் 16, 1253இல் இவ்வுலக வாழ்வை விட்டு அகன்று இறைவனில் அமைதிக் கொண்டார். 

நவம்பர் 17
புனித ஹங்கேரி எலிசபெத் (1207-1231)
புனித  எலிசபெத், ஹங்கேரி நாட்டு அரசர் இரண்டாம் அந்தரேயாவின் மகளாக ஜூலை 7, 1207 ஆம் ஆண்டு சரோசபதக் என்ற நகரில் ஹங்கேரி நாட்டு அரச மாளிகையில் பிறந்தார். இவரது அன்னையின் தங்கை அதாவது சின்னம்மா சில்சியவின் அரசி ஹெட்விக்வும் புனிதர் ஆவார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 1221இல்  எலிசெபத் தனது 14வது வயதில் லண்ட்க்ரவே என்ற துரிங்கியாவின் அரசன் நான்காம் லூயிக்கு மணம் முடிக்கப்பட்டார். சிறு வயது முதலே இயேசுவின் பிறன்பு வாழ்வால் பெரிதும் ஈர்க்கப்பட்டு பல்வேறு நற்பணிகளை ஏழை எளியோருக்கு ஆற்றுவதில் எல்லையில்லா இன்பம் கொண்டார். தான் ஒரு நாட்டினுடைய இளவரசி என்று சிறிதும் கர்வம் கொள்ளமால், அன்னை மரியவைப்போல தாழ்ச்சியில் சிறந்து விளங்கினார். 1223 ஆம் ஆண்டு தனது நாட்டில் வந்து நற்செய்தியை அறிவித்த பிரான்சிஸ்கன் துறவிகளின் எளிய வாழ்வால் பெரிதும் உந்தப்பட்டு, புனித அசிசி பிரான்சிசின் வழியில் இயேசுவை பற்றிக்கொள்ள விரும்பி, தன்னையும் பொதுநிலையினர் பிரான்சிஸ்கன் இயக்கத்தில் இணைத்துக் கொண்டார்.
புனித அசிசி பிரான்சிசைப் போல தன்னுடைய சொத்துக்களை எல்லாம் வறியவர்களுக்கு வாரி வழங்கினார், அவர்களின் முன்னேற்றத்திற்காக உழைத்தார், அரசியின் செயலினைக் கண்டு அரசர் கோபம் கொள்ளவில்லை மாறாக மகிழ்ந்து அவரை ஆதரித்தார். அரசன் போருக்கு போயிருந்த நேரம், ஆட்சியின் பொறுப்பை அரசி எலிசபெத் ஏற்றிந்தார் அப்போது, பெரும் கொள்ளை நோய் நாடு முழுவதும் பரவி மக்களை கொன்று கபளீகரம் செய்திருந்தது, இதனால் மக்கள் பசியும் பட்டினியுமாய் இருந்தனர் அதை போக்க தனது அரச உடைகளெல்லாம் அள்ளிக்கொடுத்து உதவினார். சாதாரண உடை தரித்து எளிமையான முறையில் ஆனால் மிகவும் வலிமையான வகையில் ஆட்சி செய்தார், போருக்கு சென்ற கணவன் லூயி மர்ம காய்ச்சலால் 1227இல் இறந்து விட தனது 20வது வயதில் கைம்பெண் ஆனார். லூயின் மரணத்திற்குப் பிறகு அவரது தம்பி  ஹென்றி ரச்பே மன்னனாக முடிசூட்டிக்கொண்டார், கணவனின் மறைவுக்குப்பிறகு எலிசபெத்தை அரண்மணையிலிருந்து திட்டமிட்டு வெளியேற்றினர். மனம் தளராத இந்த இளம் கைம்பெண் ஏழை எளியவர்  மத்தியில் குடியேறி காலம் அவர்களுக்காக வாழ்ந்தார், தனது கைகளாலே துணிகளை தைத்து அவர்களுக்கு தேவையான துணிகளை வழங்கினார். மர்பூர் என்ற இடத்தில ஒரு மருத்துவமனையை எழுப்பி ஏழைகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை தந்தார், வறியவர்களின் வாழ்வுக்காய் தன்னை அர்பணித்துக்கொண்ட புனித எலிசபெத் தனது 24வது வயதில் 1231இல் மரித்தார். இவர் பொதுநிலையினர் பிரான்சிஸ்கன் இயக்கத்தின் பாதுகாவலியாக போற்றப்படுகிறார்.

நவம்பர் 18
புனித ரோஸ் பிலிபீனு துஷேன் (1769-1852)
புனித ரோஸ் பிலிபீனு துஷேன் பிரான்ஸ் நாட்டின் கிரேநோப்ல் என்ற நகரில் 1769 ஆம் ஆண்டு பிறந்தார். அந்நாட்களில் பிரான்சின் தோபினே பகுதி அரசில், இவரது குடும்பம் மிகவும் செல்வ செழிப்புடன் வாழ்ந்தது, தந்தை வழக்கறிஞர், தாய் நெப்போலியன் மன்னனின் பொருளாதார ஆலோசகரின் சகோதரி, இவரது மாமன் மகன் பிரான்சிஸ் நாட்டின் பிரதமர், தாத்தா பிரான்சின் அதிபர்  என அரசின் பல முக்கிய பொறுப்புகளில் இருந்தனர்.ரோஸ் பிலிபீனு துஷேன் ஏழு சகோதரிகளில் இரண்டாவதாக பிறந்தவர், சிறு வயது முதலே சிறந்த கல்விப் பெற்றார். துறவற வாழ்வின் மீது பற்றுக் கொண்டு தூய மரியன்னை சந்திப்பு என்ற சபையில் குடும்பத்தின் பெரும் எதிர்ப்பையும் மீறி சேர்ந்தார், பிரெஞ்சு புரட்சியின் போது துறவற சபைகள் முடக்கப்பட்டதால் வீடு திரும்பி தன் அத்தைமார்களுடன் வாழ்ந்தார். 1801இல் சமய சுதந்திரம் பிரான்சில் திரும்பியுடன் தான் இருந்த சபையை புதுபிக்க முயற்சித்தார் ஆனால் இயலாமல் போகவே புதிதாக துவங்கப்பட்ட திருஇருதய சபையில் இணைந்தார். இச்சபையின் மூலம் அமெரிக்கா சென்று புதிய மடங்களை  திறந்து அவற்றின் மூலம் கல்விப் பணியாற்றினார், பல்வேறு இடங்களில் பாடசாலைகளை நிறுவி மக்களுக்கு கல்வியறிவும், ஞானறிவும் புகட்டினார், குறிப்பாக செவிந்தியர்கள் மத்தியில் இவரது பணி மிகவும் மகத்தானது. தனது 83வது வயதில் கண்பார்வை இழந்த நிலையில் நவம்பர் 18, 1852இல் மரித்தார்.

நவம்பர் 21
புனித காணிக்கை அன்னை
ஆண்டவர் இயேசு ஆலயத்தில் காணிக்கையாக ஒப்புகொடுக்கப்பட்டது புதிய ஏற்பாட்டில் வாசிக்கின்றோம், இந்நிகழ்ச்சியைப்போல அன்னை மரியாவும் ஆலயத்தில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்டார் என்ற விழாவினை இன்று திருச்சபை கொண்டாடுகிறது. இந்நிகழ்வினை நாம் புதிய ஏற்பாட்டில் காண்பதில்லை, ஆனால் திருச்சபையின் பாரம்பரியத்தில் யாகோபு நற்செய்தி என்ற நூலில் குறிபிடப்பட்டுள்ளது. அன்னை மரியா மூன்று வயது சிறுமியாக இருந்தபோது, அவரது பெற்றோர் சுவக்கின் - அன்னமாள் ஜெருசலேம் தேவாலயத்தில் காணிக்கையாக மரியன்னையை ஒப்புகொடுத்தனர். பன்னிரண்டு வயது வரை அன்னை மரியா தேவாலயத்தில் புனித பணிக்கான ஆயத்தப்பணிகளை  செய்து வந்தார், பின்னர் புனித சூசையப்பரின் பாதுகாவலில் ஒப்படைக்கப்பட்டார். காப்டிக் திருச்சபையின் பாரம்பரியத்தின்படி அன்னை மரியா தனது தந்தையை ஆறு வயதிலும், தாயை எட்டு வயதிலும் இழந்தார், பின்பு ஆலயத்தின் அரவணைப்பில், தன்னை முழுமையும் இறைவனுக்கு அர்ப்பணித்து வாழ்ந்தார் என்கிறது. அன்னை மரியின் அர்ப்பணம் என்ற இவ்விழா, இறைவனுக்கு அன்னை மரியாள் தனது, உடல், பொருள், ஆவி அதிலும் குறிப்பாக தனது மாசு மறுவற்ற கன்னிமையை காணிக்கையாக ஒப்புக்கொடுத்தார் என்ற செய்தியினை எடுத்து கூறுகிறது. இவ்விழா முதல் முறையாக பைசான்டியன் திருச்சபையால், ஜெருசலமில் உரோமை பேரரசன் ஜஸ்டினியனால் 543இல் துவங்கப்பட்டு 1372இல் திருத்தந்தை ஒன்பதாம் கிரகோரியரால் அனைத்துலக திருச்சபைக்கும் நீடிக்கப்பட்டது.

நவம்பர் 22
புனித செசிலி
இசையமைப்பாளர்கள், பாடகர்கள், பாடர் குழுக்கள் அனைவரின் பாதுகாவலி புனித செசிலியின் திருவிழாவை சிறப்பிகின்றோம். இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த உரோமை மாநகரின் அழகு பதுமை செசிலி, வலேரியன் என்ற இளைஞனுக்கு மணம் முடிக்கப்பட்டார், ஆனால் புனிதவதியாகிய செசிலி தனது கற்பை இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என வானதூதரால் அறிவுறுத்தப்பட்டதாக கணவனிடம் கூறுகின்றாள், அதற்கு வலேரியன் தானும் அந்த வானதூதரை பார்க்க வேண்டும் என்ற கூற அதற்கு செசிலி நீ ஒரு கிறிஸ்தவனானால் பார்க்க முடியும் என்று கூறி தனது கணவனை திருத்தந்தை அர்பனிடம் அனுப்பிவைத்தார். திருமுழுக்குப் பெற்று வலேரியன் வீடு திரும்பியபோது தனது மனைவி செசிலியின் தலையில் வானதூதர் ரோஜா மற்றும் அல்லி மலர்களால் பின்னப்பட்ட கீரிடத்தை வைத்துவிட்டு மறைவதை கண்டார், இக்காட்சி அகன்றதும் அங்குவந்த வலேரியனின் தம்பி திபெர்தியஸ் செசிலியின் அறை முழுவதும் மலர்களின் வாசனையால் நிரம்பியிருப்பதை நுகர்ந்து, நடந்ததை அறிந்து அவரும் கிறிஸ்தவரானார். சகோதர்கள் இருவரும் கிறிஸ்துவின் அன்பில் பிரமாணிக்கமாயிருந்து ஒவ்வொரு நாளும் கிறிஸ்துவுக்காய் மரித்த மறைசாட்சிகளை நல்லடக்கம் செய்து வந்தனர். இவ்வாறு புனித செசிலி பலரை கிறிஸ்துவுக்குள் கொணர்ந்து திருத்தந்தை மூலம் திருமுழுக்கு அளித்தார், இவருடைய நற்செய்திப் பணியை அறிந்த அரசன் கோபம் கொண்டு செசிலியை கைது செய்து நெருப்பு சூவலை அறைக்குள் பூட்டி கொடுமைபடுத்தினான், வெப்பத்தின் கொடூரத்தால், அவரது மென்மையான மேனி துடித்தது, பின்பு அவரது தலையை மூன்று முறை கத்தியால் வெட்டினர், அவற்றிலிருந்து தப்பி, மூன்று நாட்கள் உயிர் வாழ்ந்து கிறிஸ்துவுக்காய் மறைசாட்சியாக மரித்தார்.

நவம்பர் 23
புனித கிளமந்து
புனித கிளமந்து (சாந்தப்பர்), திருச்சபையின் இரண்டாவது திருத்தந்தை  ஆவார், புனித பேதுரு மறைசாட்சியாக மரித்தபின், உரோமை திருச்சபையின் தலைமை பொறுப்பை ஏற்று கிறிஸ்தவர்களை உறுதியான விசுவாசத்தில் வழிநடத்தினார். இவரை குறித்து புனித பவுலடியார் பிலிப்பியருக்கு எழுதிய மடலில் "கிளமந்தோடும், மற்ற உடன் உழைப்பாளரோடும் என்னோடும் சேர்ந்து நற்செய்திக்காகப் போராடினார்கள். அவர்களுடைய பெயர்கள் வாழ்வோரின் நூலில் எழுதப்பட்டுள்ளன" (பிலி 4:3) என்று புகழராம் சூட்டுகின்றார். தெர்துலியன் என்ற திருச்சபை வரலாற்று அறிஞரின் கூற்றுப்படி, புனித கிளமந்து, திருத்தூதர் பேதுருவால் ஆயராக அருட்பொழிவு செய்யப்பட்டு, அவருக்குப்பின் உரோமை திருச்சபையை தலைமையேற்றார் ஆனால் வேறு சில வரலாற்று அறிஞர்கள் இவரை திருத்தந்தையர்களின் வரிசையில் மூன்றாவது அல்லது நான்காவது இடத்தில வைக்கின்றனர், கிளமந்து கி.பி.92-99 ஆகிய ஆண்டுகளில் திருத்தந்தையாக பணியாற்றினார். இவருடைய காலத்தில் கொரிந்து திருச்சபையில் நிலவிய பல்வேறு குழப்பங்களை சரிசெய்து, ஆயர்களுக்கும், குருக்களுக்கும் மிகச்சிறப்பான மடலை எழுதினார், நற்கருணைப் பலி செலுத்துவது குருக்களின் மேலான பணியென்று தான் எழுதிய மடல்களில் குறிப்பிடுகின்றார்; இவ்வாறு திருச்சபையின் தந்தையர்களில் முதலானவராகப் போற்றப்படுகிறார். பேரரசர் திறாஜன் ஆட்சிக்காலத்தில் செர்சொனுசுஸ் என்ற நகருக்கு நாடுகடத்தப்பட்டு அங்குவுள்ள கல்குவாரியில் அடிமை வேலைக்கு அமர்த்தப்படார்,அங்கு வாழ்ந்த ஏழைகள் குடிக்க நீரின்றி தவித்தப்போது முழந்தாள் படியிட்டு செபித்தார், அற்புதமாக நீருற்று பீறிட்டது, மக்கள் தங்கள் தாகம் தணித்தனர், இதைபார்த்த அதிகாரிகள், புனித கிளமந்தைப் பிடித்து கட்டி கடலில் தூக்கி எறிந்தனர், இவ்வாறு மறைச்சாட்சியாக மரித்தார்.

நவம்பர் 24
புனித அந்த்ரேயா துங் லாக் (1795-1823)
1795இல் பிறந்த அந்த்ரேயா துங் லாக் 1823இல் குருவானார், வியட்நாமில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக கலகம் மூண்டபோது, மக்களை காப்பதில் அதிகம் கவனம் செலுத்தி, விசுவாசம் ஆணித்தரமாக வேரூண்டிட பெரிதும் உழைத்தார், இதனை அறிந்த கிறிஸ்தவத்தின் எதிரிகள் இவரை பிடித்து தலையை துண்டித்துக் கொன்றனர். புனித அந்த்ரேயா துங் லாக் மற்றும் 117 வியட்நாம் மறைசாட்சிகளை இன்று திருச்சபை கொண்டாடுகிறது, இவர்கள் அனைவரும் திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுலால் 1989இல் புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட்டனர். இவர்கள் அனைவரும் பதினெட்டாம் நூற்றாண்டு மறைசாட்சிகள் ஆவர், திருச்சபை பதினாறாம் நூற்றாண்டு முதல் வியட்நாம் நாட்டில் கிறிஸ்தவத்தை அறிவித்து வருகிறது, ஏராளமான மக்கள் கிறிஸ்துவில் திருமுழுக்குப் பெற்றுள்ளனர், பலர் கிறிஸ்துவின் பொருட்டு தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர், அவர்கள் அனைவரும் போற்றுதலுக்குரியவர்கள். இந்த 117 மறைசாட்சிகளில் 8 ஸ்பானிஷ் மற்றும் பிரெஞ்சு ஆயர்கள், 50 குருக்கள் (13 ஐரோப்பியர்கள் & 37 வியட்நாமியர்கள்) மற்றும் 59 வியட்நாம் பொதுநிலையினர்,  புனித அந்த்ரேயா துங் லாக் என்ற வியட்நாம் குருவின் பெயரில் திருச்சபை இவர்கள் அனைவரின் தியாகத்தையும் நினைவுகூருகிறது.

நவம்பர் 25
புனித அலெக்ஸ்சாந்திரியா  கத்ரீனா
புனித கத்ரீனா இன்றைய கிரேக்க நாட்டின் அலெக்ஸ்சாந்திரியா நகரில் அந்நாட்டின் மன்னனின் மகளாவார், அழகும் அறிவும் வசீகரம் செய்த இளவரசியாக திகழ்ந்தார், அறிவியல் மற்றும் மெய்யியலில் சிறப்பான பயிற்சியும் ஞானமும் பெற்றியிருந்தார், இவர் நான்காம் நூற்றாண்டை சேர்ந்தவர் என அறியப்படுகிறார். தனது அறிவு சார்ந்த பயணத்தில், ஒருமுறை இயேசுவின் வாழ்வை பற்றி அறிந்துகொள்கிறார், அன்று முதல் கிறிஸ்துவின்பால் பெரிதும் ஈர்க்கப்படுகிறார், ஒருமுறை கனவில் புனித அன்னை மரியாவைக் கண்டு அவரது வழிக்காட்டுதலின் பேரில் கிறிஸ்தவத்தை தழுவுகிறார். உரோமை பேரரசர் மக்ஸ்சென்தியுஸ் கிறிஸ்தவர்களை படுகொலை செய்வதை எதிர்த்து குரல்கொடுத்தார், அதற்கு அரசன் கிறிஸ்தவர்களின் நம்பிக்கை கேளிகைக்குரியது என்றான், ஆனால் கத்ரீனா உண்மைக்குரியது என்றார், அதற்கு அரசன் கிறிஸ்தவம் சாராத அறிஞர்களை அழைத்து இளவரசியிடம் பேசவைத்தான், ஆனால் அவர்கள் அனைவரும் அந்த விவாதத்திற்குப் பிறகு கிறிஸ்து உண்மையான கடவுள் என்ற விசுவாச அறிக்கையிட்டனர், கோபம் கொண்ட மக்ஸ்சென்தியுஸ் அனைத்து அறிஞர்களையும் கொன்றான். கத்ரீனா பேரரசனின் மனைவியையும் கிறிஸ்துவுக்குள் கொணர்ந்தார், இதனால் அனல் தெறிக்க கோபம் கொண்ட அரசன், கத்ரீனாவை சிறையில் அடைத்து பல்வேறு சித்ரவாதைகள் செய்தான், எதற்கும் அஞ்சாத வீரப்பெண்ணாக திகழ்ந்தார், அச்சுறுத்தலால் சாதிக்க இயலாததை ஆசையால் சாதிக்க துணிந்து, அவரை மணம் செய்து கொள்வதாக கூறினான், ஆனால் அனைத்தும் பலிக்காததால் அவரை தனது வாளுக்கு இரையாக்கினான்.

அருட்பணி. ஆ. தைனிஸ், கப்புச்சின் சபை



No comments:

Post a Comment